† இன்றைய புனிதர் †
(ஜனவரி 9)
✠ காண்டர்பரி நகர் புனிதர் அட்ரியான் ✠
(St. Adrian of Canterbury)
பிரபல அறிஞர்/ மடாதிபதி:
(Famous scholar and Abbot)
ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
பிறப்பு: தெரியவில்லை
இறப்பு: கி.பி. 710
நினைவுத் திருநாள்: ஜனவரி 9
கிறிஸ்தவ புனிதரான அட்ரியான், ஒரு புகழ்பெற்ற அறிஞரும், தென்கிழக்கு இங்கிலாந்தின் "கென்ட்" (Kent) பிராந்தியத்தின் "காண்டர்பரி" (Canterbury) என்ற இடத்திலுள்ள "புனித அகுஸ்தினார் துறவு மடத்தின்" (St Augustine's Abbey) மடாதிபதியுமாவார்.
வாழ்க்கை:
துறவியும், திருச்சபையின் மறைவல்லுனருமான, புனிதர் “பீட்” (Bede) என்பவரின் எழுத்துக்களின்படி, இவர் வட ஆப்பிரிக்காவின் (North Africa) “பெர்பெர்” (Berber) எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேப்பிள்ஸ் (Naples) அருகேயுள்ள "மொனாஸ்டெரியம் நிரிடனும்" (Monasterium Niridanum) எனும் துறவு மடத்தின் மடாதிபதியாகவும் இருந்தவர் ஆவார். திருத்தந்தை “விட்டாலியன்” (Pope Vitalian) இவருக்கு இரண்டு முறை "காண்டர்பரி" (Canterbury) மறை மாவட்டத்தின் பேராயர் பொறுப்பு அளித்தார். ஆனால் அதனை அவர் தாழ்ச்சியுடன் மறுத்து விட்டார். முதலில், அவர் அருகாமையிலுள்ள துறவு மடத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ (Andrew) என்னும் துறவிக்கு பரிந்துரைத்தார். அவரும் அதனை தமது தள்ளாத வயதைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். இரண்டாவது முறையாக பேராயர் பொறுப்பு அவருக்கு திருத்தந்தை விட்டாலியனால் கொடுக்கப்பட்ட போது, அவர் அதனை தமது நண்பரான "தியோடர்" (Theodore of Tarsus) என்பவருக்காக பரிந்துரைத்தார். எதேச்சையாக அவரும் ரோமில் இருந்ததாலும், அவர் பேராயர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள சம்மதித்ததாலும் அவருக்கே அப்பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், அட்ரியான் ஏற்கனவே இரண்டு முறை "கௌல்" (Gaul) எனும் இடத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அனுபவம் இருந்ததாலும், அவரே புதிய பேராயருடன் பிரிட்டன் செல்ல வேண்டுமென திருத்தந்தை விட்டாலியன் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
கி.பி. 668ம் ஆண்டு, மே மாதம், 27ம் நாள், ஆரம்பித்த அவர்களது இங்கிலாந்து நோக்கிய பயணம் சரியாக ஒரு வருடம் கழித்து 669ம் ஆண்டு, மே மாதம் நிறைவுற்றது. கடல்வழி பயணம் மேற்கொண்ட அவர்கள் "மார்செய்ல்" (Marseille) நாட்டைக் கடந்து "ஆர்ல்ஸ்" (Arles) நாடு போய் சேர்ந்தனர். கௌல் மாநிலத்தை ஆண்ட அப்போதைய இளம் அரசன் "மூன்றாம் க்லோடேயர்" (Clotaire III) என்பவரின் கீழுள்ள அரசு ஆளுநரிடமிருந்து கடவுச்சீட்டு (Passports) பெறுவதற்காக அங்கே அவர்கள் பேராயர் ஜான் என்பவருடன் தங்கினார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் வட ஃபிரான்ஸ் நோக்கி பயணித்தனர். குளிர் காலத்தில் தங்குவதற்காக அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து பயணித்தனர். தியோடோர் பாரிஸ் ஆயர் அகேல்பெர்க்டஸ்" (Agelberctus) என்பவருடனும் அட்ரியான் 'சென்ஸ் ஆயர் எம்மோன்" (Emmon, Bishop of Sens) என்பவருடனும் பயணித்தனர். இங்கிலாந்து சென்றடைந்ததும் அட்ரியான் உடனடியாக "புனித பீட்டர் துறவு மடத்தின்" (St. Peter Abbey) மடாதிபதியாக பொறுப்பேற்றார். இம்மடம்தான் பின்னாளில் "புனித அகுஸ்தினார் துறவு மடம்" (St. Augustine's Abbey) என்று அழைக்கப்பட்டது.
புனிதர் "பீட்" (Bede) அட்ரியானைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
அட்ரியான் கிரேக்கம் மற்றும் இலத்தின் போன்ற பன்மொழிகளில் விவிலியத்தைக் கற்று புலமை பெற்றிருந்தார். இவர் ஒரு வெற்றிகரமான நிர்வாகியும் ஆவார். அவரது வழிகாட்டுதலின் கீழே அவரது துறவு மடம் கணிசமாக செல்வாக்கு பெற்றது. அட்ரியான் ஒரு புகழ்பெற்ற இறையியலாளர் மட்டுமல்லாது மதச் சார்பற்ற கற்றலை கூடியவரை நிறைவேற்றினார். தீவின் அனைத்து பகுதிகளிலும் பயணித்து பலதரப்பட்ட அறிஞர்களை ஒன்று கூட்டினார்கள். தம்மைத் தாமே பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். விடாமுயற்சியுடன் அவர்கள் செய்த சேவைகள், கிறிஸ்தவ மதம் சம்பந்தமானதாக மட்டுமல்லாது சீருக்குரிய கலை, வானியல், எண்கணிதம், சொல்லாட்சி, உயிரியல், கணிதம் மற்றும் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் கற்பித்தனர். அட்ரியான் மற்றும் தியோடர் ஆகியோரின் மாணவர்களாக தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் பேசிய கிரேக்கம் மற்றும் இலத்தீன் ஆகிய மொழிகள் அவர்களது தாய் மொழியைப் போலவே இருந்தன.
இங்கிலாந்து, கல்வியால் மலர்ச்சியடையும் நாடாக இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், திருத்தந்தை முதலாம் கிரகோரியின் (Pope Gregory I) மொழிமாற்ற ("Liber Pastoralis Curae") நூலின் முன்னுரையில் அரசர் “அல்ஃபிரெட்" (King Alfred) இதனைக் குறிப்பிடுகின்றார்.
ஜனவரி ஒன்பதாம் தேதி மரணமடைந்த அட்ரியான், அவரது துறவு மடத்தின் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment