Sunday, January 26, 2020

† புனிதர் திமொத்தேயு † (ஜனவரி 26)



† இன்றைய புனிதர் †
(ஜனவரி 26)

✠ புனிதர் திமொத்தேயு ✠
(St. Timothy)

ஆயர், மறைசாட்சி:
(Bishop, Martyr)

பிறப்பு: கி.பி. சுமார் 17
லிஸ்ட்ரா (Lystra)

இறப்பு: கி.பி. சுமார் 97 (வயது 79/80)
மசெடொனியா (Macedonia)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கீழை மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூத்தரன் திருச்சபை
(Lutheran Church)

நினைவுத் திருவிழா: ஜனவரி 26

புனிதர் திமொத்தேயு, கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும், பண்டைய கிரேக்க நகரமான “யூஃபேசஸ்” (Ephesus) எனுமிடத்தின் முதல் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும், "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறிஸ்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும்.
(காண்க: 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு).

வாழ்க்கை வரலாறு:
திமொத்தேயு, “ஆசியா மைனர்” (Asia Minor) என்று அறியப்படும் “அனடோலியன் தீபகற்பத்தின்” (Anatolian peninsula) மத்திய பிராந்தியமான “லிஸ்ட்ராவின்” (Lystra) “லிக்கவோனியன்” (Lycaonian) நகரில் பிறந்தவர் ஆவார். இவரது தாயார் “யூனிஸ்” (Eunice), கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாறிய ஒரு முன்னாள் யூதப் பெண்மணியாவார். இவரது தந்தையார் கிரேக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

புனிதர் பவுலும், “அந்தியோக்கியா மற்றும் சைபிரஸ்” (Apostle to Antioch and Cyprus) ஆகிய நாடுகளின் அப்போஸ்தலருமான புனிதர் “பர்னபாஸ்” (Saint Barnabas) ஆகிய இருவரும் முதன்முதலாக “லிஸ்ட்ரா” (Lystra) நகர் வந்தபோது, பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்ற ஒருவரை பவுல் குணப்படுத்தினார். பலர் அவரது போதனைகளை ஏற்றுக்கொள்வதற்கு வழிநடத்தினார்.

இவர் பற்றின சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளன. புனித பவுல் தமது இரண்டாம் மறையறிவிப்புப் பயணத்தை மேற்கொண்ட போது அனத்தோலியா (Anatolia) பகுதியில் "லிஸ்ட்ராவுக்குச்" (Lystra) சென்றார்.

ஓரிடத்தில் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைத்து, "ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்" என்று கூறுகின்றார்.
(1 கொரிந்தியர் 4:17).

மேலும் பவுல், திமொத்தேயுவைக் குறித்து "விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை" என்கிறார்
(1 திமொத்தேயு 1:1).

இன்னோர் இடத்திலும் பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைக்கிறார்.
(2 திமொத்தேயு 1:1).

திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்த பவுல் திமொத்தேயு யூத முறைப்படி விருத்தசேதனம் செய்ய ஏற்பாடு செய்தார்.
(காண்க: திருத்தூதர் பணிகள் 16:3).

திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டார். "இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே" என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 4:14).

திமொத்தேயுவின் தாய் “யூனிஸ்” (Eunice) மற்றும் பாட்டி “லோயிஸ்” (Lois) இருவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததை பவுல் எடுத்துக்காட்டுகிறார்.
(காண்க: 2 திமொத்தேயு 1:5). அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாம்.

மற்றோர் இடத்தில் பவுல், திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்: "நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறித்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது."
(காண்க: 2 திமொத்தேயு 3:15).

திமொத்தேயு ஒருமுறையாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது எபிரேயர் திருமுகத்திலிருந்து தெரிகிறது: "நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார்."
(காண்க: எபிரேயர் 13:23).

திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்தது என்பதும் பவுலின் கூற்றிலிருந்து தெரிகிறது: "தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து."
(காண்க: 1 திமொத்தேயு 5:23).

எபேசு நகரில் தவறான கொள்கைகள் பரவும் ஆபத்து இருந்ததால் பவுல் திமொத்தேயுவிடம் அங்கேயே தங்கி இருக்கும்படி கூறுகிறார்: "நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர். அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு."
(காண்க: 1 திமொத்தேயு 1:3).

எபேசு சபையில் தகுதிவாய்ந்த சபைக் கண்காணிப்பாளர்களையும் திருத்தொண்டர்களையும் தேர்ந்தெடுத்து நியமிப்பது குறித்து பவுல் திமொத்தேயுக்கு விரிவான வழிகாட்டல் தருகிறார்.
(காண்க: 1 திமொத்தேயு 3:1-13).
இந்த வழிமுறைகள் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகின்றன.

பிற்கால மரபுச் செய்திகள்:
பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97ல், திமொத்தேயுவுக்கு 80 வயது ஆனபோது, அவர் பேகனிய சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக் கொண்டுபோய் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.

கி.பி. 4ம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் மீபொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் தூய திருத்தூதர்கள் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

வணக்கம்:
ரோமன் கத்தோலிக்க திருச்பையில் திமோத்தேயுக்கு பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைத்து விழாக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழா ஜனவரி 26ம் நாள் ஆகும்.

கீழை மரபுச் சபையில் திமொத்தேயு ஒரு திருத்தூதராகவும், புனிதராகவும், மறைசாட்சியாகவும் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா ஜனவரி 22ம் நாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment