† இன்றைய புனிதர் †
(ஜனவரி 14)
✠ அருளாளர் தேவசகாயம் பிள்ளை ✠
(Blessed Devasahayam Pillai)
மறைசாட்சி:
(Martyr)
பிறப்பு: ஏப்ரல் 27, 1712
பள்ளியாடி, நட்டாலம், கன்னியாகுமரி மாவட்டம், திருவாங்கூர் அரசு, இந்தியா
(Palliyadi, Nattalam, Kanyakumari District, Kingdom of Travancore, India)
இறப்பு: ஜனவரி 14, 1752 (வயது 39)
ஆரல்வாய்மொழி, திருவாங்கூர் அரசு, இந்தியா
(Aralvaimozhy, Kingdom of Travancore, India)
ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை இலத்தீன் ரீதி
(Catholic Church Latin Rite)
முக்திப்பேறு பட்டம்: டிசம்பர் 2, 2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பெயரால்,
கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ
புனித ஃபிரான்சிஸ் சவேரியார் பேராலயம், கோட்டாறு மறைமாவட்டம்
(St. Xavier's Church, Kottar, Tamil Nadu by Cardinal Angelo Amato (On behalf of Pope Benedict XVI)
முக்கிய திருத்தலங்கள்:
புனித ஃபிரான்சிஸ் சவேரியார் பேராலயம், கோட்டாறு மறைமாவட்டம்
(Cathedral of St. Francis Xavier, Kottar)
நினைவுத் திருவிழா: ஜனவரி 14
சித்தரிக்கப்படும் வகை: சங்கிலியால் கட்டப்பட்டவாறு
அருளாளர் தேவசகாயம் பிள்ளை (Blessed Devasahayam Pillai) இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் கி.பி. 1712ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் நாள், நாயர் குல இந்து குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்கு பெற்றபோது அவருக்கு "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசரஸ்" (Lazarus) என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது.
இவர் கி.பி. 1752ம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது.
அவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைசாட்சியாகவே கருதப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக அவரை மறைசாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" (அருளாளர் - Blessed) என்றும் கி.பி. 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாள் பிரகடனம் செய்தது.
இந்நிகழ்ச்சி கோட்டாறு மறைமாவட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில் கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.
பிறப்பு:
மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் கி.பி. 1712ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 23ம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். வளர்ந்ததும், வில் வித்தை, வர்ம கலைகள், போருக்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.
அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள் சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.
மனமாற்றம்:
கி.பி. 1741ம் ஆண்டு, குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு கடற்படைத் தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த “பெனடிக்டஸ் டி லெனோய்” (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறை பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.
நாளடைவில் இந்த “பெனடிக்டஸ் டி லெனோய்” நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதை கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசமடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லி, “பெனடிக்டஸ் டி லெனோய்” அவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறிஸ்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த “ஜியோவன்னி பட்டிஸ்டா புட்டரி” (Rev. Father: Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள் தருகின்ற "இலாசரஸ்" (Lazarus) என்னும் பெயரைச் சூட்டினார்.
கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறிஸ்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனார்.
இறப்பு:
இவர் இந்து சமய பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராகப் பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறிஸ்துவுக்காகத் தனது உயிரையும் கொடுக்க சித்தமான தேவசகாயம், தமது கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா, அவரை மரண தண்டனைக்காகச் சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம்பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து, அவரைக் கேவலப்படுத்தும்படியாகவும், கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும், அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள்.
கி.பி. 1752ம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் நாள், தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாகத் தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டில் எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் அடக்கம் செய்தனர்.
மறைசாட்சி பட்டம் அளிக்கும் விழா:
2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மை ஆலயத்தை அடுத்துள்ள கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு "முக்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயல்பட்ட கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வாசித்தளித்தார்.
கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ, இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்குவதற்காக ரோமிலிருந்து கோட்டாருக்கு வருகை தந்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும், பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், கலந்துகொண்டனர். தேவசகாயம் பிள்ளை பக்தி, கிறிஸ்தவர் அல்லாத பிற சமயத்தினர் நடுவிலும் நீண்ட காலமாக இருந்து வருவதைத் தொடர்ந்து பல சமயத்தினர் சிறப்பு விழாவில் பங்கேற்றனர்.
அருளாளர் தேவசகாயம் பிள்ளைக்கு மறைசாட்சி பட்டம் அளிக்கும் நிகழ்வை முன்னிட்டு, கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மை பேராலயத்தில் இவருடைய கல்லறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாள், அக்கல்லறையைச் சந்தித்து அங்கு இறைவேண்டல் நிகழ்த்திட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
No comments:
Post a Comment