Monday, December 9, 2019

† புனிதர் ஜுவான் டியெகோ † (டிசம்பர் 9)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 9)

✠ புனிதர் ஜுவான் டியெகோ ✠
(St. Juan Diego)

மரியான் திருக்காட்சியாளர்:
(Marian visionary)

பிறப்பு: கி.பி. 1474
குவாஹ்டிட்லன், மெக்ஸிகோ
(Cuauhtitlán, Mexico)

இறப்பு: கி.பி. 1548 (வயது 73–74)
டெபேயக், மெக்ஸிகோ
(Tepeyac, Mexico)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 6, 1990
குவாதலுப் பேராலயம், மெக்ஸிகோ நகர்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Basilica of Guadalupe, Mexico City by Pope John Paul II)

புனிதர் பட்டம்: ஜூலை 31, 2002
குவாதலுப் பேராலயம், மெக்ஸிகோ நகர்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Basilica of Guadalupe, Mexico City by Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
குவாதலுப் பேராலயம்
(Basilica of Guadalupe)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 9

பாதுகாவல்: பழங்குடி மக்கள் (Indigenous Peoples)

புனிதர் ஜுவான் டியெகோ, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவரும், அமெரிக்க நாடுகளின் பழங்குடியைச் சார்ந்த முதல் ரோமன் கத்தோலிக்க புனிதரும் ஆவார். “புனிதர் ஜுவான் டியேகோ குவாஹ்ட்லடோட்ஸின்” (Saint Juan Diego Cuauhtlatoatzin) மற்றும், “புனிதர் ஜுவான் டியெகோட்ஸில்” (Saint Juan Diegotzil) ஆகிய பெயர்களாலும் இவர் அறியப்படுகின்றார்.

கி.பி. 1531ம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெவ்வேறு நான்கு சம்பவங்களின்போது “டெபேயக்" மலைப் பகுதியிலும், (Hill of Tepeyac) பின்னர் மலைப்பகுதியின் வெளியேயும் (தற்போதைய மெக்ஸிகோ பெருநகரம்) இவருக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதாக கூறப்படுகிறது.

ஜுவான் டியெகோவுக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், "டெபேயக்" (Tepeyac) மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் "குவாதலுப் திருத்தலத்தில்" புனிதர் ஜுவான் டியெகோவின் 'டில்மா' (Tilma) என்றழைக்கப்படும் அங்கி அல்லது சால்வை இருப்பதாகவும் அதன்மேலே அன்னை கன்னி மரியாளின் தூய உருவம் பதிந்திருப்பதாகவும் அறியப்படுகின்றது. இந்த அதிசய சித்திரத்தை கொடுப்பதற்காகவே தூய அன்னை தரிசனம் தந்ததாகவும் அதன் காரணமாகவே மலையடிவாரத்தில் தோன்றிய திருத்தலம் "குவாதலுப் அன்னை திருத்தலம்" என்ற பெயரில் வழிபடப்படுகிறது எனவும் சொல்கிறார்கள். இதனால் இந்த திருத்தலத்தின் வல்லமைகளும் பெருமைகளும் ஸ்பேனிஷ் மொழி பேசும் அமெரிக்கர்களிடையேயும், அதற்கப்பாலும் பரவி, இன்று உலகளவில் கத்தோலிக்க திருயாத்திரைத் தலமாக மாறியுள்ளது.

"டாக்டர் மிகுவேல் லியோன்-போர்டில்லா" (Dr. Miguel León-Portilla) போன்ற மெக்ஸிகன் அறிஞர்களின் கூற்றுப்படி, கி.பி. 1474ம் ஆண்டு மெக்ஸிகோவில் பிறந்த ஜுவான் டியெகோ, ஒரு இந்திய வம்சாவளி ஆவார். இவர் செல்வந்தரோ செல்வாக்குள்ளவரோ கிடையாது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இவர் திருமணம் ஆனவர் என்றும், ஒரு மகன் இருந்தார் என்றும் ஒரு கதை. திருமணம் ஆகியும் கடைசிவரை கன்னித்தன்மையுடன் வாழ்ந்தனர் என்றொரு கதை. நற்செய்தி பிரசங்கம் ஒன்றினால் ஈர்க்கப்பட்ட இவர்கள் கற்புநெறி வாழ்க்கை வாழ்ந்தனர் என்றும் கூறுவார். ஆனால், எதற்கும் உறுதியான ஆதாரங்கள் கிடையாது.

கி.பி. 1524ம் ஆண்டில், முதன்முறையாக மெக்ஸிகோ வந்த பிரான்சிஸ்கன் மிஷனரிகளின் முதல் குழுவினரால் ஜுவான் டியெகோவும் அவரது மனைவி என்று அறியப்படும் 'மரியா லூசியாவும்' (María Lucía) திருமுழுக்கு பெற்றனர். இவருக்கு அன்னையின் தரிசனம் கிடைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே இவரது மனைவி மரித்துப்போனார்.

இவருக்கு கத்தோலிக்க மறையின் மீதிருந்த உற்சாகமான ஈர்ப்பும் அன்னை மரியாளின் மீது இவர் கொண்டிருந்த அளவற்ற மரியாதையும் பக்தியும் இவரது வெள்ளை மனமும் கருணையுடன் பிறருடன் பழகும் அணுகுமுறையும் இவரது புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளின் தவிர்க்க இயலாத அளவுகோல்களாக அமைந்தன என்பர்.

இவருக்கு அன்னை மரியாளின் தரிசனம் கிட்டியதன் பின்னர், இவர் டெபேயக் மலை அடிவாரத்தில் அமைந்திருந்த துறவு மடத்தின் அருகே வசிக்க அனுமதிக்கப்பட்டார். அவர் தமது வாழ்வின் இறுதிவரை அருகிலேயே அமைந்திருந்த அன்னை குவாதலுப் திருத்தலத்தில் சேவை செய்து வாழ்ந்தார்.

No comments:

Post a Comment