Monday, December 9, 2019

† கடவுளின் அதிதூய அன்னை மரியாளின் அமலோற்பவ திருவிழா † (டிசம்பர் 8)



† இன்றைய திருவிழா †
(டிசம்பர் 8)

✠ கடவுளின் அதிதூய அன்னை மரியாளின் அமலோற்பவ திருவிழா ✠
(Feast of the Immaculate Conception of the Most Holy Mother of God)

திருவிழா நாள்: டிசம்பர் 8

கடவுளின் அதிதூய அன்னை மரியாளின் அமல உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியாள், தமது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். 

மரியாள் ஜென்மப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, சிறப்பிக்கப்படுகிறது.

அமல உற்பவம்:
அமலோற்பவ அன்னை:
பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது.

தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாளை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து, பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே, மரியாளின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாளுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.

வரலாற்றில்:
✹ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், டிசம்பர் மாதம், 9ம் தேதி “கீழை கிறிஸ்தவ திருச்சபை” (Eastern Christian Church) முதன்முதலாக "கடவுளின் அதிதூய அன்னையின் மாசற்ற அமலோற்பவம்" (Feast of the Conception of the Most Holy and All Pure Mother of God) என்ற பெயரில் கடவுளின் தூய அன்னையின் அமலோற்பவ விழாவை “சிரியா”வில் (Syria) கொண்டாடியது.

✹ கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கீழைத் திருச்சபையின் பெரும்பாலான இடங்களில் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.

✹ கி.பி. எட்டாம் நூற்றாண்டில், மேலைத் திருச்சபைக்கு பரவிய இவ்விழா டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட்டது.

✹ கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில், "மரியாள் பாவமின்றி உற்பவித்தவர்" என்ற கருத்துரு தோன்றியது.

✹ கி.பி. 1476ம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்டஸ் (Pope Sixtus IV) மரியாளின் அமல உற்பவம் திருவிழாவை அனைத்து இடங்களிலும் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.

✹ “டிரென்ட் பொதுச்சங்கம்” (Council of Trent) (1545-1563), பிற்காலத்தில் இவ்விழா கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

✹ கி.பி. 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக (Dogma of Faith) அறிவித்தார்.

✹ கி.பி. 1858ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டில் லூர்து அன்னையாக காட்சி அளித்த மரியன்னை, "நானே அமல உற்பவம்" என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment