Wednesday, December 4, 2019

† டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் † (டிசம்பர் 4)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 4)

✠ டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் ✠
(St. John of Damascus)

மறைவல்லுநர்:
(Doctor of the Church)

பிறப்பு: கி.பி. சுமார் 676
டமாஸ்கஸ், பிலாட் அல்-ஷாம், உமய்யாட் கலிஃபாட்
(Damascus, Bilad al-Sham, Umayyad Caliphate)

இறப்பு: டிசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம், பிலாட் அல்-ஷாம், உமய்யாட் கலிஃபாட்
(Mar Saba, Jerusalem, Bilad al-Sham, Umayyad Caliphate)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
லூதரனியம்
(Lutheranism)
ஆங்கிலிக்க ஒன்றியம்
(Anglican Communion)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 4

பாதுகாவல்:
மருந்தாளுநர்கள் (Pharmacists)
திருஉருவ ஓவியர்கள் (Icon Painters)
இறையியல் மாணவர்கள் (Theology Students)

டமாஸ்கஸ் நகர புனிதர் யோவான் ஒரு சிரியன் கிறிஸ்தவ துறவியும், குருவும் (Syrian monk and priest) ஆவார். “டமாஸ்கஸ்” (Damascus) நகரில் பிறந்த இவர், “எருசலேம்” (Jerusalem) நகருக்கு அருகில் உள்ள “மார் சாபா” (Mar Saba) என்னும் இடத்திலுள்ள அவரது துறவற மடத்தில் மரித்தார்.

பல்துறை வல்லுநர்:
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், தத்துவம், இசை முதலியவற்றில் பெரும் ஆர்வமும் புகழும் பெற்றிருந்ததுடன், அவற்றில் வல்லுனராகவும் திகழ்ந்தார். கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு பெறுவதற்கு முன்னர், இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்த “முகம்மது” (Muhammad) அவர்களுக்குப் பின்னர் அரசாண்ட சிவில் மற்றும் ஆன்மீக முஸ்லிம் ஆட்சியாளரான “காலிஃபா” (Caliph) என்பவரது தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் என்றும் கூறப்படுவதுண்டு. பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறிஸ்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருஓவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இவர், கிழக்கு மரபுவழி திருச்சபையின் தந்தையருள் ஒருவர் ஆவார்.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர் ஆவார். இவர் மரியாளின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) என்றும் கௌரவிக்கப்படுகிறார். இவருடைய நினைவுத் திருவிழா நாள் டிசம்பர் மாதம், 4ம் நாள் ஆகும்.

இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இஸ்லாமிய ஆளுநர் “காலிஃபா” (Caliph) அவர்களின் அவையில் இவரது தந்தை பணி புரிந்ததால் இவரும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கடைசி திருச்சபைத் தந்தை:
ரோமன் கத்தோலிக்க அறிஞர்களின் கருத்துப்படி, புனிதர் டமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர் ஆவார். கி.பி. 1890ம் ஆண்டு, இவர் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் கத்தோலிக்க திருச்சபையின் மறை வல்லுனராக பிரகடணப்படுத்தப்பட்டார்.

திருஓவியங்களுக்கு வணக்கம் பற்றி:
திருஓவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று “பைசண்டைன்” (Byzantine) மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, டமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர், கி.பி. 787ம் ஆண்டு நிகழ்ந்த “இரண்டாம் நீசேயா பொதுச்சங்கத்தின்’போது,” (Second Council of Nicaea) திருஓவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.

No comments:

Post a Comment