† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 28)
✠ புனிதர் காஸ்பர் டெல் புஃபலோ ✠
(St. Gaspar del Bufalo)
மத குரு/ மறைப்பணி சபை நிறுவனர்:
(Priest/ Founder of Missionary)
பிறப்பு: ஜனவரி 6, 1786
ரோம், இத்தாலி
(Rome, Italy)
இறப்பு: டிசம்பர் 28, 1837
ரோம் (Rome)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம்: கி.பி. 1905
திருத்தந்தை பத்தாம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: ஜூன் 12, 1954
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
நினைவுத் திருநாள்: டிசம்பர் 28
புனிதர் காஸ்பர் டெல் புஃபலோ, ஒரு ரோமன் கத்தோலிக்க மத குருவும் "மதிப்புமிக்க திருஇரத்தத்தின் சபை" (Missionaries of the Precious Blood) என்ற, குருக்களுக்கான மறைபோதக சபையின் நிறுவனரும் ஆவார்.
"காஸ்பர் மெல்சியோ பல்தஸர்" (Gaspar Melchior Balthazar) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இறைவனின் "திருவெளிப்பாடு” (Feast of the Epiphany) விழா தினமான கி.பி. 1786ம் வருடம், ஜனவரி மாதம் ஆறாம் தேதியன்று பிறந்தவர் ஆவார். அன்றைய தினமே திருமுழுக்கும் பெற்றார். கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி, மத்தேயு நற்செய்தியில், கிறிஸ்து இயேசு பிறந்த வேளையில், புகழ்பெற்ற வெளிநாட்டவர்கள் (Distinguished Foreigners) "மாகி" (Magi) எனும் ஞானியர் மூவர் கீழ் திசையிலிருந்து வந்து, புதிதாய்ப் பிறந்திருக்கும் யூதர்களின் அரசரான இயேசுவைக் கண்டு வணக்கம் செலுத்தச் சென்றனர். அவர்கள் மூன்று ஞானிகள், அல்லது மூன்று அரசர்கள் (3 Wise men or 3 Kings) என்றும் அழைக்கப்படுகின்றனர். இம்மூன்று அரசர்களின் நினைவாகவே "காஸ்பர் மெல்சியோ பல்தஸர்" என்ற திருமுழுக்குப் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.
இவரது தந்தையார் ஒரு அரச சமையல்காரராவார். அவரது பெயர், "அன்னுன்ஸியேடா" (Annunziata) ஆகும். இவரது தாயாரின் பெயர், "அன்டோனியோ டெல் புஃபலோ" (Antonio del Bufalo) ஆகும். இவரின் தாய் இவரைக் கவனித்து சிறந்ததோர் கிறிஸ்தவ நெறியில் வளர்த்தார்.
காஸ்பர் குழந்தைப் பருவத்திலேயே நோயால் தாக்குண்டு, மிக நலிவுற்று காணப்பட்டார். இதனால் அவரது தாயார் அவரது ஒன்றரை வயதிலேயே அவருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவைத்தார். மிகவும் அபூர்வமான, குணமடைய இயலாத கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதிலும், பழகுவதிலும் காஸ்பர் விருப்பமின்றி வாழ்ந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரோமில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செபித்து வந்தார். புனிதர்களின் படத்தை பார்க்கும்போது அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். தமது தாயாரின் தூண்டுதலால் செபிக்கக் கற்றுக்கொண்டார். தாயாரும் தொடர்ந்து செபித்தார். புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியாருக்கு செபங்கள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. ஆச்சாரியமூட்டும் வகையில் இவரது கண் நோய் குணமானது. கண் பார்வை திரும்ப வந்தது.
காஸ்பர், புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியாரின்பால் ஈர்க்கப்பட்டார். அவரைப் போலவே வாழ வேண்டுமென்று விருப்பம் கொண்டார். அவரின் வரலாற்றைப் படித்து தன் வாழ்வை அவரைப் போலவே மாற்றினார். நாளடைவில் இவர் "சிறிய அலோசியஸ்" என்றழைக்கப்பட்டார்.
இவர் தனது கல்வியை ரோமர்களின் அரசப் பள்ளியில் பயின்றார். கல்லூரியில் படிக்கும்போது மிகத் திறமையுடன் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்தார். அப்போதுதான் ஒரு மறைபரப்பு பணியாளராக வேண்டுமென்று விரும்பினார். அடிக்கடி ஏழைகளையும் நோயுற்றவர்களையும் காணச் சென்றார். கி.பி. 1808ல் கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
தமது பங்கு ஆலயத்தில் தொடர் மறையுரைகள் ஆற்றினார். இவரது மறையுரையால் மக்கள் மனதில் நெருப்பு பற்றி எரிந்தது. அனைவரின் இதயத்தையும் இறைவன்பால் திருப்பினார். இவரின் மறையுரையை கேட்டவர்கள் எவராக இருந்தாலும் மனம்மாறி இறைவனை பின்செல்லாமல் போகவில்லை. அந்த அளவிற்கு வலிமையான மறையுரைகளை ஆற்றினார். சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரும் இவரின் மறையுரையை எளிதாகப் புரிந்து கொண்டனர். இவ்வாறு மறையுரையின் வழியாக அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்தார்.
கி.பி. 1809ம் ஆண்டு, நெப்போலியன் அதிகாரம் ரோமில் நுழைந்தது. நெப்போலியனுக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய மறுத்த காஸ்பரையும், பிற குருக்களையும் கைது செய்து இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்துக்கு கடத்தி சிறைவைத்தனர்.
கி.பி. 1814ம் ஆண்டு, நெப்போலியனின் ஆதிக்க சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காஸ்பர், அந்நாளில் புதிதாய் மறு சீரமைக்கப்பட்டிருந்த இயேசு சபையில் இணைய முடிவெடுத்தார்.
திருத்தந்தை ஏழாம் பயசின் வேண்டுகோளின்படி இத்தாலி முழுவதும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார்.
கி.பி. 1815ம் ஆண்டில், பல இடர்பாடுகளுக்கிடையேயும் எதிர்ப்புகளுக்கிடையேயும் "ஊம்ப்ரியா மாகாணத்தின் சேன் ஃபெலிஸ்" என்னுமிடத்தில் உள்ள துறவற மடத்தில் (Abbey of San Felice in Giano, Umbria) "மதிப்புமிக்க திருஇரத்தத்தின் சபை" (Missionaries of the Precious Blood) என்ற, குருக்களுக்கான மறைப்பணி சபையை நிறுவினார். இவர் அங்குள்ள மக்களின் உதவியுடன் கைவிடப்பட்ட "பத்தாம் நூற்றாண்டின் துறவு மடத்தை" (10th century monastery) சீர் செய்தார். இச்சபையினர் ஆரம்ப காலத்தில் மறைபரப்பு பணியையும், ஆன்மீக வழிகாட்டுதலையும், பள்ளிகளில் ஆசிரியர் பணிகளையும் செய்தனர். பின்னர் ரோம் திரும்பி மீண்டும் மறைபரப்பு பணியை ஆற்றினார்.
அக்காலத்தில், (கி.பி. 1821) திருத்தந்தை மாகாணங்கள், "பண்டிட்ஸ்" (Bandits) என்னும் கொள்ளைக்காரர்கள் வசம் போனது. அவர்கள் கடலோர பிரதேசங்களை தமது கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். திருத்தந்தை ஏழாம் பயசின் ஆலோசகரான "கர்தினால் க்ரிஸ்டால்டி" (Cardinal Cristaldi) காஸ்பரையும் அவரது மிஷனரியின் அங்கத்தினர்களையும் "பண்டிட்ஸ்" கட்டுப்பாட்டிலிருந்த நகரங்களுக்கு சென்று மறைபோதனை செய்யவும் செப இல்லங்கள் மற்றும் சிறு ஆலயங்களையும் நிறுவி மக்களை மனம் மாற்றும் பணி செய்ய கேட்டுக்கொண்டார். அதன்படி, துப்பாக்கி ஏந்திய "பண்டிட்ஸ்"களின் முன்னிலையில் இவர்கள் மக்கள் முன் பிரச்சாரம் செய்தனர். மறை போதனை செய்தனர். ஏகப்பட்ட சிறு ஆலயங்களையும் செப மடங்களையும் நிறுவினர்.
தமது சொந்த நகரில் பிரபலமாயிருந்தாலும், காஸ்பர் எதிரிகள் இல்லாமலில்லை. "பண்டிட்ஸ்களிடம்" லஞ்சம், கைக்கூலி வாங்கி காலத்தை ஒட்டிய அரசு அதிகாரிகளுக்கு, காஸ்பரின் குழுவினர் "பண்டிட்ஸ்களை மனம் மாற்றுவது பிடிக்கவில்லை. அவர்கள் காஸ்பருக்கு எதிராக செயல் பட்டனர். ஏறத்தாழ, காஸ்பரை பணிநீக்கம் செய்யும்படி திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோவை (Pope Leo XII) நிர்ப்பந்தித்தனர். ஆனால், காஸ்பர் அனைத்து எதிர்ப்புகளிளிருந்தும் வெளிவந்தார்.
காஸ்பரின் சமகால அருட்பணியாளர்களில் ஒருவரான ஆயரும், உணர்வுபூர்வ குருவுமான "புனிதர் வின்சென்ட் ஸ்ட்ரம்பி," (St. Vincent Strambi) இவரை "ஆன்மீக பூகம்பம் போன்றவர்" (Like a Spiritual Earthquake) என்று வர்ணித்தார்.
"பல்லோட்டின்ஸ்" சபையை நிறுவிய "புனிதர் வின்சென்ட் பல்லோட்டி" (St. Vincent Pallotti) இவரது நெருங்கிய நண்பராவார். இவரே காஸ்பரின் மரண படுக்கையில் இவருக்கு உதவிகள் செய்தவராவார். கி.பி. 1837ம் ஆண்டு, தமது மரணம்வரை மத்திய இத்தாலி மக்களை மனம் மாறச் செய்வதில் காஸ்பர் ஓய்வின்றியும் களைப்பறியாதும் பணியாற்றினார்.
இவர் "அல்பனோவில்" (Albano) அடக்கம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment