† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 27)
✠ திருத்தூதர் புனிதர் யோவான் ✠
(St. John the Apostle)
இயேசுவின் அன்பு சீடர், நற்செய்தியாளர், திருத்தூதர்:
(Beloved Disciple of Jesus, An author of the Gospel and Apostle)
பிறப்பு: கி.பி. 6
பெத்சாய்தா, கலிலேயா, ரோமப் பேரரசு
(Bethsaida, Galilee, Roman Empire)
இறப்பு: கி.பி. 100
பட்மோஸ், கிரேக்கம், ரோமப் பேரரசு
(Patmos, Greece, Roman Empire)
ஏற்கும் சபை/ சமயம்: அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளும்
நினைவுத் திருவிழா: டிசம்பர் 27
சித்தரிக்கப்படும் வகை:
புத்தகம், கழுகு, இரசக் கிண்ணம்
பாதுகாவல்:
அன்பு, விசுவாசம், நட்பு, ஆசிரியர்கள், புத்தக விற்பனையாளர்கள், தீயால் சுடப்பட்டவர்கள், விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கலை-முகவர்கள், ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், தேர்வுகள், அறிஞர்கள், இறையியலாளர்கள்
புனிதர் யோவான் அல்லது புனிதர் அருளப்பர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் இயேசுவின் அன்பு சீடர் ஆவார். கிறிஸ்தியல் கொள்கைகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை இவர்தான் எழுதினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் கிறிஸ்தவ திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராக போற்றப்படுகிறார்.
புனிதரின் வாழ்வு:
புனிதர் யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர்.
இவரது தந்தை பெயர் “செபதேயு” (Zebedee). தாயாரின் பெயர், “சலோமி” (Salome) ஆகும். இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய “யாக்கோபு” (James) இவரது சகோதரர் ஆவார். இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். முதலில் “திருமுழுக்கு யோவானின்” (John the Baptist) சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதலின்படி இயேசுவைப் பின்பற்றினார். இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொண்டார்.
இயேசு யோவானையும், அவர் சகோதரர் யாக்கோபையும் “இடியின் மக்கள்” ("Boanerges" - "Sons of thunder") என்று அழைத்தார். திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார்.
இயேசுவின் உருமாற்றம் (மத்தேயு நற்செய்தி 17:1) உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர்.
இறுதி இரவுணவின்போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இயேசு திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, தனது தாய் மரியாளைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு, யோவானிடம் அளித்தார்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் எருசலேமில் நற்செய்தி அறிவித்த யோவான், மரியாளின் விண்ணேற்புக்கு பின்னர் “எபேசஸ்” (Ephesus) நகருக்கு சென்று போதித்தார் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்த துன்புறுத்தல்களுக்கு பேர்போன பேரரசன் “டொமீஷியன்” (Emperor Domitian) ஆண்ட முதலாம் நூற்றாண்டின் இறுதியில், ஆதி கிறிஸ்தவ எழுத்தாளரும், “இலத்தீன் கிறிஸ்தவத்தின் தந்தை” (The Father of Latin Christianity) என்றழைக்கப்படும் “தெர்துல்லியன்” (Tertullian) என்பவரின் கூற்றின்படி, கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும், இவர் யாதொரு தீங்குமின்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. இந்த அற்புத நிகழ்வை நேரில் கண்ட “கொலோஸ்ஸிய” (Colosseum) பார்வையாளர்கள் அனைவரும், கிறிஸ்தவத்திற்கு மனம் மாறினர். அதன்பின் “கிரேக்க பட்மொஸ்” தீவுக்கு (Greek island of Patmos) நாடு கடத்தப்பட்ட யோவான், அங்கேயே மரணம் அடைந்தார்.
யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இஸ்லாமிய பார்வை:
இஸ்லாமியர்களின் புனித நூலான “கொரான்” (Quran), இயேசுவின் சீடர்களைப் பற்றி பேசுகிறது. ஆனால், எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. முஸ்லிம் விளக்கங்கள், மற்றும் புனித கொரான் விளக்கவுரைகள் அவர்களின் பெயர்களை குறிப்பிடுவதுடன், யோவானின் பெயரையும் குறிப்பிடுகிறது. “அந்தியோக்கியாவுக்கு” (Antioch) நற்செய்தி அறிவிக்கச் சென்ற மூன்று அப்போஸ்தலர்களில் யோவானும் ஒருவர் என்று, ஆதிகால இஸ்லாமிய மரபு கூறுகிறது.
No comments:
Post a Comment