Wednesday, December 25, 2019

† கிறிஸ்து பிறப்புத் திருவிழா † (டிசம்பர் 25)



† இன்றைய திருவிழா †
(டிசம்பர் 25)

✞ கிறிஸ்து பிறப்புத் திருவிழா ✞
(Christmas)

✠ வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார். ✠
~ யோவான் நற்செய்தி 1:14

கிறிஸ்து பிறப்பு விழா, திருவருகைக்கால முதல் ஞாயிறில் தொடங்கி, டிசம்பர் 25ம் தேதி ஆடம்பரங்களோடு கொண்டாடப்பட்டு, திருக்காட்சி விழாவோடு முடிவடைந்து விடுவதல்ல.

மாறாக, எமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவங்களிலும் நமதாண்டவர் இயேசுவின் பிறப்பை, அவரது இறை பிரசன்னத்தைக் கண்டுணரவேண்டும் என்பது எனது பனிவான அபிப்பிராயம்.

நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் திருவிழாவை அகில உலகமும் எவ்வித வேறுபாடுமின்றி கொண்டாடி மகிழும் மகிமையை இன்றைய நாளுக்கான நற்செய்தியின் அடிப்படையில் நாம் தியானிக்கும்போது, எமதாண்டவர் இயேசுவின் பிறப்பு, அவரது தாழ்ச்சி, எளிமை நிறைந்த ஆழமான அர்த்தத்தினை எமக்குக் கற்பிக்கின்றது என்ற உண்மையை நாம் உணரலாம்.

“அனைத்து உலகையும் ஒளிர்விக்கும் ஒளியாக இவ்வுலகிற்கு அவர் வந்தார். ஆனால் இந்த உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை” (யோவான் 1:1-10).
தமது உரிமைப் பிள்ளைகளது பாவக்கட்டுக்களை நீக்கி, விடுதலை வழங்கிட முன்வந்தும், “அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை” (யோவான் 1:1-11) எனவும் நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகின்றார்.

அகில உலகின் அரசரான கிறிஸ்து அரசர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த வேளையில் அவருக்கென அரச மாளிகை இருக்கவில்லை. மாறாக, மாட்டுக்கொட்டில் தயாராக இருந்தது. தற்காலத்திய குழந்தை மகப்பேற்று நிபுணர்கள் இருக்கவில்லை. மாறாக நீதிமான் சூசையும், ஏழை இடையர்களும் அங்கேயிருந்தனர்.

பளபளக்கும் நவீன பட்டுத்துணியால் தெய்வக் குழந்தை உடுத்தப்படவில்லை. மாறாக, கந்தல் துணியால் சுற்றி, மிருகங்களது தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட்டார்.

இறைமகன் இயேசுவின் பிறப்பை பரலோகத் தந்தை எதற்காக இவ்வாறு மிகவும் எளிய முறையில் நெறிப்படுத்தினார் என நாம் சிந்திக்கலாமல்லவா?

“இதோ உமது அடிமை” எனத் தம்மையே தாழ்த்திய அன்னை மரியாள் உதரத்தில் பிறப்பெடுத்த குழந்தை இயேசு, பெத்தலகேமின் மாட்டுக்கொட்டிலில் பிறந்ததனால், தனது சாயலாக உருவாக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக இறைவன் இவற்றிலும் மேலாகத் தன்னைத் தாழ்த்தவேண்டும் என்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறார் என்பதனை எம்மால் மறுக்க முடியுமா?

தெய்வத்திருமகன் இயேசு பெத்லகேமில் பிறந்ததால் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவம் இன்று அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாக மாறியுள்ளதல்லவா? அவ்வாறே ஆண்டவர் இயேசு, எமது உள்ளத்தில் வந்து பிறந்திட நாம் இடம் ஒதுக்கிக் கொடுக்காவிட்டால் நாமும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே.

“மார்கழிக் கடுங்குளிரில் மாட்டடையும் குடிலினிலே காரிருளில் பிறந்தவரே” என நாம் பாடலாம். ஆனால் எமது இதயமோ அந்த மகிமை பெற்ற நள்ளிரவிலும் கொடியதாக வன்மம், வஞ்சனை, பழிவாங்கல், சாதியம் என்ற இருள் சூழ்ந்து, இறுமாப்போடு நாம் வாழவில்லையா? இப்படி நாம் வாழ்ந்துகொண்டு எவ்வாறு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட முடியும்?

கிறிஸ்து பிறப்புவிழா வருடா வருடம் வந்துபோகின்ற ஏதோ ஒருவிழா போன்று எமக்கு அமைந்திடாதிருக்க பரிசுத்த ஆவியின் துணை வேண்டிச் செபிப்போம். இவ்வுலகின் பாவக் கட்டுக்களிலிருந்து மீட்க வந்த மகிமை நிறைந்தவர் எமது சிறிய உள்ளத்திலும் வந்து பிறப்பதனால் நாமும் புதுப்பிறப்பாக மாற்றமடைந்திட வரம் வேண்டுவோம். அகில உலகையும் மீட்கவந்த மெசியா எமது உள்ளத்திலும் பிறந்துள்ளாரென நாமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

பட்டும் பவளமும் தருவதற்காய், பாராள்வோர் பார்த்திருக்க, பசுவின் கொட்டில் போதுமென்று பாலகனாய்ப் பரிணமித்த பாசத்திருமகனே!
பாவம் நிறை உலகினிலே குழந்தை போலாகினால், தீதேதுமில்லையென்று குவலயத்தில் பாவமறியா குழந்தை வடிவினிலே உபதேசம் செயும் குரு பாலகனே, எம் பாவம் தீர்த்து எமக்கு சமாதானம் அருளும் இறையருள் மகனே! ஆமென் †

No comments:

Post a Comment