Sunday, December 1, 2019

† அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட் † (டிசம்பர் 1)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 1)

✠ அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட் ✠
(Blessed Charles de Foucauld)

மறைசாட்சி:
(Martyr)

பிறப்பு: செப்டம்பர் 15, 1858
ஸ்ட்ராஸ்பர்க், ஃபிரான்ஸ்
(Strasbourg, France)

இறப்பு: டிசம்பர் 1, 1916 (வயது 58)
டாமன்ரஸ்செட், ஃபிரென்ச் அல்ஜீரியா
(Tamanrasset, French Algeria)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: நவம்பர் 13, 2005
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 1

அருளாளர் சார்லஸ் டி ஃபௌகோல்ட், ஒரு ஃபிரென்ச் மறைப்பணியாளரும், கத்தோலிக்க குருவும், அல்ஜீரியாவின் (Algeria) “சஹாரா" (Sahara) பாலைவனத்தில் வாழ்ந்த “துவாரெக்” (Tuareg) மக்களிடையே வாழ்ந்த ஒரு துறவியும் ஆவார். கி.பி. 1916ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையினால் மறைசாட்சியாக மதிக்கப்படுகிறார். பின்னாளில் திருத்தந்தை “பதினாறாம் பெனடிக்ட்” இவருக்கு முக்திபேறு பட்டமளித்து கௌரவித்தார். இவரது எழுத்துக்களும் உத்வேகமும், 1933ம் ஆண்டில் “இயேசுவின் சிறிய சசோதரர்கள்” (Little Brothers of Jesus) என்னும் துறவறசபை நிறுவப்பட வழிவகுத்தது என்பர்.

“சார்லஸ் யூஜின் டி ஃபௌகோல்ட்” (Charles Eugène de Foucauld) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவரின் தாத்தா இவரை வளர்த்தார். இவர் ஃபிரஞ்ச் இராணுவத்தில் ஒரு அதிகாரியாக வட ஆப்பிரிக்காவில் இருந்தபோது இவருக்கு பாலைவனத்தின் தனிமையில் இறைவனைக் காண வேண்டும் என வலுவான உணர்வுகள் உண்டானது. ஆதலால் ஃபிரான்ஸுக்குத் திரும்பி வந்த இவர், பாரிஸ் நகரிலுள்ள “தூய அகஸ்டின்” (Church of Saint Augustin) தேவாலயத்தில், தனது 28ம் வயதில் மனம்மாறினார்.

கி.பி. 1890ம் ஆண்டு, முதலில் ஃபிரான்சிலும், பின்னர் “சிரிய-துருக்கி” (Syrian-Turkish) எல்லையிலுள்ள “அக்பேஸ்” (Akbez) நகரிலுமுள்ள “சிஸ்டேரியன் டிராப்பிஸ்ட்” (Cistercian Trappist order) துறவற சபையில் சேர்ந்த இவர், அங்கு மனநிறைவு அடையாததால் அங்கிருந்து வெளியேறி, கி.பி. 1897ம் ஆண்டில் நாசரேத்துக்கு சென்றார். அங்கே, “எளிய கிளாரா” (Convent of Poor Clares) பள்ளியினருகேயுள்ள இடத்தில் தனிமையிலும் தபம் மற்றும் செபத்திலும் தன் வாழ்வைக் கழித்தார். பின்னர் 1901ல் தென் ஃபிரான்சிலுள்ள “விவியேர்ஸ்” (Viviers) எனுமிடத்திற்கு திரும்பி தனது 43ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். இதன் பின்னர் அல்ஜீரியாவில் உள்ள சகாராவில் வனவாசியைப்போல வாழ்ந்துவந்தார். “துவாரெக்” (Tuareg) இன மக்களுக்கு பணி செய்ய அவர்களோடு பத்து வருடம் தங்கியிருந்து அவர்களின் மொழி, கலாச்சாரம் முதலியவைகளைக் கற்று அவர்களின் மொழிக்கு ஒரு அகராதியினை எழுதினார். ஆனால் இவ்வகராதி இவரின் இறப்புக்குப் பின்னரே அச்சாகி வெளியானது.

1916ம் ஆண்டு, டிசம்பர் மாதம், முதல் தேதி, லிபியா (Libya) மற்றும் சூடான் (Sudan) பிராந்தியங்களிலுள்ள இஸ்லாமிய அரசியல்-நாடோடி அமைப்பான “செனுஸ்ஸி” (Senussi Bedouin) எனும் அமைப்புடன் தொடர்புடைய “எல் மதானி அக் சொபா” (El Madani ag Soba) என்பவன் தலைமையிலான ஆயுதம் ஏந்திய குழுவொன்று, சார்லசை அவரது தனிமைக் கோட்டையிலிருந்து வெளியே இழுத்து வந்தது. அவர்களது நோக்கம், சார்லசை கடத்துவதேயாகும். ஆனால், திடீரென இரண்டு காவலர்களால் அதிர்ச்சியடைந்த குழுவிலுள்ள பதினைந்தே வயதான “செர்மி அக் தொரா” (Sermi ag Thora) என்பவன், உடனடியாக துப்பாக்கியால் சார்லசின் நெற்றிப்பொட்டில் சுட்டான். சார்லஸ் உடனடியாக மரணமடைந்தார்.

துவாரெக் இன மக்களின் பாதுகாப்புக்காக சார்லஸ் கட்டிய கோட்டைக் கதவின் வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையினால் மறைசாட்சி என கருதப்படுகிறார். இவருக்கு 2005ம் ஆண்டு, நவம்பர் மாதம், 13ம் நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) அருளாளர் பட்டம் அளித்தார்.

No comments:

Post a Comment