Wednesday, December 18, 2019

† டூர்ஸ் நகர புனிதர் கஷியானஸ் † (டிசம்பர் 18)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 18)

✠ டூர்ஸ் நகர புனிதர் கஷியானஸ் ✠
(St. Gatianus of Tours)

டூர்ஸ் நகரின் முதலாம் ஆயர்:
(First Bishop of Tours)

பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
மரபுவழி திருச்சபை
(Orthodox Church)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 18

பாதுகாவல்: டூர்ஸ் நகரம் (Tours)

டூர்ஸ் நகர புனிதர் கஷியானஸ், டூர்ஸ் நகரை ஸ்தாபித்த ஆயர் ஆவார். இவர் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

சரித்திரவியலாளர்களின் கூற்றின்படி, அக்காலத்தில் (கி.பி. 250) ரோம பேரரசர்கள் (Roman Emperors) “டெஸியஸ்” (Decius) மற்றும் “வெட்டுஸ் கிரேட்டஸ்” (Vettus Gratus) ஆகியோரின் உத்தரவின்படி திருத்தந்தை ஃபபியான் (Pope Fabian) அவர்கள், மறை போதனை செய்வதற்காக ஏழு ஆயர்களை ரோம் நகரிலிருந்து, ரோம பேரரசின் "கால்" (Gaul) பிரதேசங்களுக்கு அனுப்பினார்.

ஏழு ஆயர்களும் அவர்கள் நற்செய்தி பரப்ப சென்ற இடங்களும் பின்வருமாறு:
கஷியானஸ் -> டூர்ஸ்
(Gatianus to Tours)
ட்ராஃபிமஸ் -> ஆர்லிஸ்
(Trophimus to Arles)
பௌல் -> நர்பொன்
(Paul to Narbonne)
சடுர்நின் -> டௌளுஸ்
(Saturnin to Toulouse)
டெனிஸ் -> பாரிஸ்
(Denis to Paris)
ஆஸ்ட்ரோமின் -> க்ளேர்மொன்ட்
(Austromoine to Clermont)
மார்ஷல் -> லிமொஜெஸ்
(Martial to Limoges)

டூர்ஸ் நகர் சென்றடைந்த கஷியானஸ், அங்குள்ள மக்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு அடிமைப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை கண்டு உணர்ந்தார். அவர்கள் சிலைகளைப் பூஜிக்கும் வழக்கமுள்ளவர்களாகவும் பல்வேறு கடவுளர்களை வணங்கும் மக்களாகவும் இருந்தனர். முதலில், அவர்களிடமிருந்த இம்மூட நம்பிக்கைகள் அகல கஷியானஸ் பெரும்பாடு பட்டார். அவர்களுக்கு மறை போதனை செய்தார். நற்செய்தியை அறிவித்தார். இறைவன் ஒருவரே என்றும் சிலை வழிபாடு கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதென்றும் போதித்தார். "கால்" பிரதேச மக்களின் எதிர்ப்புகளினிடையே டூர்ஸ் மக்களிடம் நற்செய்தியை அறிவிக்க அவர் சுமார் அரை நூற்றாண்டு காலத்தை அர்ப்பணித்தார்.

டூர்ஸ் பிராந்தியத்தினைச் சுற்றியிருந்த அப்போஸ்தலர்களை ஒன்றிணைக்க கடும் முயற்சி செய்த இவர் அதில் வெற்றியும் கண்டார். பின்னர், அவர்களை டூர்ஸ் பிராந்தியம் முழுதும் அனுப்பி பல ஆலயங்களை கட்டுவித்தார். அவரது மரணத்தின்போது, டூர்ஸ் மறைமாவட்டம் பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டிருந்தது.

கஷியானஸ், தமது ஐம்பதாண்டு கடின உழைப்பு, உண்ணாநோன்புகள், விரதங்கள், செபம், தவம், மறைபோதனை, நற்செய்தி அறிவித்தல் ஆகியவற்றின் பின்னே டூர்ஸ் நகரின் சுற்றுச்சுவர்களின் வெளியே ஏழை மக்களுக்காக நல்வாழ்வு மையம் (Hospice) ஒன்றினை அமைத்தார்.

தமது முதிர்வயதில் நோயுற்ற கஷியானஸ் நோய் படுக்கையில் இருந்த காலத்தில், உலக மீட்பரே நேரில் தோன்றி அவருக்கு தரிசனம் தந்ததாகவும் "கஷியானஸ், பயப்படாதே! உமது கிரீடம் தயாரிக்கப்பட்டுவிட்டது! பரலோகத்தில் உன்னை வரவேற்க புனிதர்கள் காத்திருக்கின்றனர்!" என்று கூறியதாகவும் இன்றளவும் நம்பப்படுகின்றது. அத்துடன், கடவுளே அவருக்கு நற்கருணை அளித்ததாகவும், கஷியானஸின் இறுதிச் சடங்கையும் அவரே நிர்வகித்ததாகவும் விசுவாசம் உள்ளது. ஏழு நாட்களின் பின்னர் கஷியானஸ் நித்திய அமைதியில் வாழ சென்றார்.

புனிதர் கஷியானஸின் உடலின் மிச்சங்கள் இன்றும் டூர்ஸ் நகர பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment