Tuesday, December 17, 2019

† மாதாவின் புனிதர் ஜான் † (டிசம்பர் 17)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 17)

✠ மாதாவின் புனிதர் ஜான் ✠
(St. John of Matha)

ஒப்புரவாளர், பரிசுத்த திரித்துவ சபை நிறுவனர்:
(Confessor and Founder of the Trinitarians)

பிறப்பு: ஜூன் 23, 1160
ஃபொளகான்-டி-பார்சிலோனட்
(Faucon-de-Barcelonnette)

இறப்பு: டிசம்பர் 17, 1213
ரோம் (Rome)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

புனிதர் பட்டம்: அக்டோபர் 21, 1666
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்
(Pope Alexander VII)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 17

புனிதர் ஜான், 12ம் நூற்றாண்டின் ஒரு கிறிஸ்தவ குருவும், ஒப்புரவாளரும், மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை மீட்க அர்ப்பணிக்கப்பட்ட "பரிசுத்த திரித்துவ" சபையின் நிறுவனரும் ஆவார்.

பின்புலம்:
கி.பி. எட்டாம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில், இடைக்கால ஐரோப்பாவிலே (Medieval Europe), தெற்கு ஐரோப்பாவின் (Southern Europe) கிறிஸ்தவ இராச்சியங்களுக்கும், வட ஆபிரிக்கா (North Africa), தென் ஃபிரான்ஸ் (Southern France), சிசிலி (Sicily) மற்றும் ஸ்பெயினின் (Spain) சில பகுதிகளின் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குமிடையே இடைவிடாத சண்டை நடந்துகொண்டிருந்தது. "ஜேம்ஸ் W பிராட்மன்" (James W. Brodman) எனும் சரித்திர ஆசிரியரின்படி, இஸ்லாமிய கடற்கொள்ளையர்கள் (Muslim Pirates), அல்லது கடலோர ரவுடிகள் (Coastal Raiders), அல்லது பிராந்தியத்தில் நடைபெற்ற இடைவிடாத இடைப்பட்ட சண்டை அல்லது போர் காரணமாக, கட்டலோனியா (Catalonia), லாங்குவேடோக் (Languedoc) மற்றும் இடைக்கால கிறிஸ்தவ ஐரோப்பாவின் பிற கடலோர மாகாணங்களில் (Medieval Christian Europe) வாழ்ந்தவர்களுக்கு, கைப்பற்றுதல் அல்லது கடத்தல் அச்சுறுத்தல் தொடர்ச்சியான கவலையாக இருந்தது. இஸ்லாமிய குழுக்களும் இராணுவமும் நடத்திவந்த தாக்குதல்கள் கிட்டத்தட்ட வருடம் முழுவதுமே இருந்துவந்தது.

சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்பது, கருணை ரீதியாக பட்டியலிடப்பட்டிருந்தது. பல கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கைகளில் விழும் அபாயத்தில் இருந்த சிலுவைப் போரின் காலத்தில், இந்த புனிதமான பணிக்கு, பிரத்தியேகமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கிறிஸ்தவ மத சபைகளின் எழுச்சி நடந்தது.

வாழ்க்கை:
ஜானுடைய வாழ்க்கையின் கதைகளின் பெருவாரியான பகுதிகள், அவரது மரணத்தின் பின்னர் பரவின புராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே. தென் ஃபிரான்ஸ் நாட்டின், "புரோவென்ஸ்" (Provence) எல்லைகளின் "ஃபொளகான்-டி-பார்சிலோனட் (Faucon-de-Barcelonnette) எனும் பகுதியின், உன்னத குடும்பத்தின் "யூஃபேமியஸ்" (Euphemius) மற்றும் "மார்த்தா" (Martha) தம்பதியரின் மகனாக கி.பி. 1160ம் ஆண்டு, ஜூன் மாதம், 23ம் தேதி பிறந்த ஜான், புனிதர் திருமுழுக்கு யோவானின் (St. John the Baptist) நினைவாக திருமுழுக்கு பெற்றார். அவரது தந்தை யூஃபேமியஸ், அவரை "ஐக்ஸ்" (Aix) எனும் இடத்திற்கு அனுப்பினார். அங்கு அவர் ஒரு இளம் பிரபுவுக்கு ஏற்ற இலக்கணம், ஃபென்சிங், சவாரி மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அங்கு அவர், தனது பெற்றோர் தமக்கு அனுப்பிய பணத்தில் கணிசமான பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார் என்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று நோயுற்ற ஏழைகளுக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (University of Paris) இறையியல் கற்ற அவர், கி.பி. 1192ம் ஆண்டு, டிசம்பர் மாதம், தனது 32 வயதில் குருத்துவம் பெற்றார். பரிசுத்த திரித்துவ சபையின் (Trintarian) பாரம்பரியத்தின்படி, கி.பி. 1193ம் ஆண்டு, ஜனவரி மாதம், 28ம் நாளன்று, ஜான் தனது முதல் திருப்பலியை கொண்டாடினார். சிலுவைப்போர் (Crusades) மும்முரமாக நடந்துகொண்டிருந்த அந்த காலத்தில், அவர் நிகழ்த்திய முதல் திருப்பலியின்போது, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளை (ஒரு கிறிஸ்தவ - மற்றொரு இஸ்லாமிய கைதி) தமது கைகளில் பிடித்துக்கொண்டிருந்த இயேசுவின் திருக்காட்சியை இவர் கண்டதாக கூறப்படுகிறது. கிறிஸ்தவ கைதி ஒரு சிவப்பு மற்றும் நீல சிலுவையுடன் ஒரு ஊழியரை சுமந்திருந்தார். திருப்பலியின் பிறகு, இஸ்லாமியரிடமிருந்து கிறிஸ்தவ கைதிகளை மீட்கும் பணியில் தன்னை ஈடுபடுத்த ஜான் முடிவு செய்தார். இந்த பணியில் இறங்குவதற்கு முன், ஓய்வு, பிரார்த்தனை மற்றும் தம்மைத்தாமே வருத்திக்கொள்ளுதல் ஆகியவற்றில் சிறிது நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம் என்று அவர் நினைத்தார். "மியூக்ஸ்" (Diocese of Meux) மறைமாவட்டத்தில் "காண்டெலு" (Gandelu) அருகே ஒரு பெரிய மரத்தில் வசித்துவந்த துறவியான "வாலோயிஸ் நகர் புனிதர் பெலிக்ஸ்" (St. Felix of Valois) பற்றி கேள்விப்பட்ட அவர், தம்மை சீர்படுத்தும் விதமாக அவருடைய அறிவுரைகளை வேண்டினார்.

பரிசுத்த திரித்துவ சபை (Order of the Most Holy Trinity):
ஒரு நாள், புனிதர் ஃபெலிக்ஸுடன் நடந்து கொண்டிருந்தபோது,  ஒரு நீரோடை ஒன்றில், தனது கொம்புகளுக்கிடையே சிவப்பு மற்றும் நீல நிற சிலுவையுடன் ஒரு வெள்ளை நிற ஆண் கலைமானின் காட்சியை ஜான் காணக்கிடைத்தது. தமது முதல் திருப்பலியின்போது, தாம் கண்ட திருக்காட்சியை ஃபெலிக்ஸுக்கு வெளிப்படுத்திய ஜான், அடிமைத்தனத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை மீட்பதற்காக தான் கொண்டிருந்த வடிவமைப்பினை அவரிடம் விளக்கி, மேலும் அதை நிறைவேற்ற ஃபெலிக்ஸின் உதவியை வேண்டினார். கி.பி. 1197ம் ஆண்டின் இறுதியில், கடுமையான குளிர்காலத்தின் மத்தியில், திருத்தந்தையின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களிருவரும் ரோம் நகர் புறப்பட்டனர்.

சரியாக ஒரு வருடம் கழித்து, கி.பி. 1198ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் நாளன்று, கிறிஸ்தவ கைதிகளின் மீட்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட திரித்துவ சபைக்கான தொடக்க அங்கீகாரத்தை திருத்தந்தை மூன்றாம்  இன்னசென்ட் (Pope Innocent III) அவர்களிடமிருந்து பெற்றார். இந்த சபை, 1209ம் ஆண்டு, முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. பரிசுத்த திரித்துவ சபையின் முதல் மடாலயம் (Monastery), பாரிஸுக்கு வடக்கேயுள்ள "செர்ஃப்ராய்ட்" (Cerfroid) நகரில் நிறுவப்பட்டது. இரண்டாவது மடாலயம், ரோம் நகரின் "ஃபார்மிஸ்" (Formis) நகரிலுள்ள "சான் டொமாசோ" (Church of San Tommaso) தேவாலயத்தில் நிறுவப்பட்டது. கிறிஸ்தவ அடிமைகள் முதன்முதலில் கி.பி. 1201ம் ஆண்டு, இச்சபையால் மீட்கப்பட்டனர். கி.பி. 1202 மற்றும் 1210ம் ஆண்டுகளில், வட ஆபிரிக்காவில் (North Africa), மத்தியதரைக் கடல் (Mediterranean Sea) மற்றும் தெற்கே சஹாரா பாலைவனத்தில் (Sahara Desert) பரவியுள்ள "டுனீசியா" (Tunisia) நாட்டுக்கு பயணப்பட்ட ஜான், தாமே எண்ணற்ற கிறிஸ்தவ அடிமைகளை மீட்டு அழைத்து வந்தார்.

ஜான் இறப்பதற்கு முன், அவர் அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸைச் (St. Francis of Assisi) சந்தித்ததாகவும், ஃபிரான்சிஸ்கன் சபையின் (Franciscan Order) பயனாளர்களில் ஒருவரான "ஃபிராங்கிபானி" (Frangipani Family) குடும்பத்திற்கு புனிதர் ஃபிரான்சிஸை அறிமுகப்படுத்தியதாகவும் திரித்துவ மரபு கூறுகிறது.

மாதாவின் புனிதர் ஜான், கி.பி. 1213ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் நாளன்று, ரோம் நகரில், கேலியன் மலையில் (Caelian Hill) உள்ள, "ஃபார்மிஸின்" (Formis) "செயின்ட் தாமஸ் இல்லத்தில்" (House of St. Thomas) காலமானார்.

நல்ல பரிகார அன்னை (Our Lady of Good Remedy):
புனிதர் ஜான், அடிமைச் சந்தைகளுக்குச் செல்லவும், கிறிஸ்தவ அடிமைகளை வாங்கவும், பரிசுத்த திரித்துவத்தின் பெயரில் அவர்களை விடுவிக்கவும் பரிசுத்த திரித்துவ சபையினை நிறுவினார். இந்த திட்டத்தை செயல்படுத்த, இவர்களுக்கு அதிக அளவு பணம் தேவைப்பட்டது. எனவே, அவர்கள் தங்கள் நிதி திரட்டும் முயற்சிகளை கடவுளின் தாயான மரியாளின்ன் பாதுகாவலின் கீழ் வைத்தனர். அன்னையின் உதவிக்கு நன்றி தெரிவிக்குமுகமாக, புனிதர் ஜான், "நல்ல பரிகார அன்னை" (Our Lady of Good Remedy) என்ற பெயரில் அழைத்தார். இந்த பண்டைய தலைப்பின் கீழ், அன்னை மரியாள் மீதான பக்தி, ஐரோப்பாவிலும் (Europe), லத்தீன் அமெரிக்காவிலும் (Latin America) பரவலாக அறியப்படுகிறது. நல்ல பரிகார அன்னையின் திருவிழாவினை, திருச்சபை அக்டோபர் மாதம், 8ம் நாளன்று கொண்டாடுகின்றது. "நல்ல பரிகார அன்னை" பெரும்பாலும் ஒரு பணப் பையை புனிதர் ஜானிடம் ஒப்படைப்பதாக சித்தரிக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment