Saturday, December 14, 2019

† புனிதர் நிமதுல்லா யூஸ்ஸேஃப் கஸ்ஸாப் அல்-ஹர்டினி † (டிசம்பர் 14)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 14)

✠ புனிதர் நிமதுல்லா யூஸ்ஸேஃப் கஸ்ஸாப் அல்-ஹர்டினி ✠
(St. Nimatullah Youssef Kassab Al-Hardini)

துறவி, மதகுரு மற்றும் ஒப்புரவாளர் :
(Monk, Priest, and Confessor)

பிறப்பு: கி.பி. 1808
ஹர்தின், வட கவர்னோரெட், லெபனான்
(Hardine, North Governorate, Lebanon)

இறப்பு: டிசம்பர் 14, 1858
புனிதர்கள் ஸிப்ரியான் மற்றும் ஜஸ்டினா துறவு இல்லம், க்ஃபிஃபன், பெட்ரௌன் ஜில்லா, லெபனான்
(Monastery of Saints Cyprian and Justina Kfifan, Batroun District, Lebanon)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 10, 1998
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 16, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம்:
புனிதர்கள் ஸிப்ரியான் மற்றும் ஜஸ்டினா துறவு இல்லம், க்ஃபிஃபன், பெட்ரௌன் ஜில்லா, லெபனான்
(Monastery of Saints Cyprian and Justina Kfifan, Batroun District, Lebanon)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 14

பாதுகாவல்:
பெய்ரூட், லெபனான்
(Beirut, Lebanon)

"யூஸ்ஸேஃப் கஸ்ஸாப்" (Youssef Kassab) என்ற இயற்பெயர் கொண்ட "புனிதர் நிமதுல்லா யூஸ்ஸேஃப் கஸ்ஸாப் அல்-ஹர்டினி" ஒரு லெபனான் தேசத்து துறவியும் (Lebanese monk), மத குருவும், "மரோனைட்" திருச்சபையின் அறிஞரும் (Scholar of the Maronite Church) ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார்.

கி.பி. 1808ம் ஆண்டு, லெபனான் நாட்டின் ஹர்தின், வட கவர்னோரெட் என்ற இடத்தில் பிறந்த இவரது தந்தை பெயர் “ஜார்ஜ் கஸ்ஸாப்” (George Kassab) ஆகும். "மரோனைட்" திருச்சபையின் ஒரு மத குருவின் மகளான “மரியம் ராட்” (Marium Raad) இவரது தாயார் ஆவார். இத்தம்பதியினருக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர்தான் யூஸ்ஸேஃப் கஸ்ஸாப்.

இவர், தமது ஆரம்ப கல்வியை "ஹௌப்" (Houb) என்ற இடத்திலுள்ள 'லெபனீய மரோனைட் திருச்சபை' நடத்திய "புனிதர் அந்தோனியார் துறவு மடத்தில்" (Monastery of St. Anthony) பயின்றார்.

கி.பி. 1822ம் ஆண்டு, ஆரம்ப கல்வியை பூர்த்தி செய்த இவர், துறவறப் புகுநிலையின் கல்வி (Novitiate) கற்பதற்காக "கோஸயா" (Qozhaya) என்ற இடத்திலுள்ள "புனிதர் அந்தோனியார் துறவு மடத்தில்" சேர்ந்தார். கி.பி. 1828ம் ஆண்டு அக்கல்வியைப் பூர்த்தி செய்த இவர், "நிமதுல்லா" என்ற பெயரை தமது துறவு பெயராக பெற்றார். இப்பெயரிலேயே நாம் தற்போது இவரை அறிகிறோம்.

இவரது ஆரம்ப கால துறவு வாழ்க்கையில் துறவு மடாதிபதி இவருக்கு புத்தகங்களை பிணைக்கும் (Binding Books) பணிகளை ஒதுக்கினார். அத்துடன், செபம் மற்றும் ஒருத்தல்களிலேயே இவர் காலம் கழித்தார். பல வேளைகளில், துறவு மடத்தின் ஆலயத்தில் முழு இரவுகளையும் நற்கருணை ஆராதனையில் கழித்தார்.

நிமதுல்லா தமது மத பணிகளின் சத்தியப் பிரமாண வாக்குகளை கி.பி. 1830ம் ஆண்டு, நவம்பர் மாதம், 14ம் தேதியன்று ஏற்றார். அதன் பிறகு, குருத்துவ அருட்பொழிவிற்கான உயர்கல்வி கற்க "க்ஃபிஃபன்" என்ற இடத்திலுள்ள "புனிதர்கள் சிப்ரியான் மற்றும் ஜாஸ்டினா" துறவு மடத்திற்கு (Monastery of Saints Cyprian and Justina in Kfifan) அனுப்பப்பட்டார். கி.பி. 1833ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், குருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அத்துடன் குருத்துவ மாணவர்களின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.

ஒரு துறவியாக, நிமதுல்லா தமது வாழ்நாள் முழுதும் செபத்திலும் தாம் சார்ந்திருந்த சபையின் சேவையிலுமே கழித்தார். தமது பின்வந்த துறவியருக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையில் முன்மாதிரியாக விளங்கினார்.

கி.பி. 1858ம் ஆண்டு, நோயில் வீழ்ந்த நியமதுல்லா இரண்டு வாரகால ஜூரத்தின் பின்னர் மரித்தார். இவரது உடல் மறு அடக்கத்திற்காக தோண்டி எடுக்கப்பட்டபோது, அது கெடாமல் முழுமையாக இருக்கக் கண்டு, அவரது சக துறவிகள் வியந்துபோயினர். இவரால் பற்பல அற்புதங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment