Saturday, December 14, 2019

† சிலுவையின் புனிதர் யோவான் † (டிசம்பர் 14)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 14)

✠ சிலுவையின் புனிதர் யோவான் ✠
(St. John of the Cross)

நிறுவனர், குரு, மறைவல்லுநர்:
(Religious Founder, Priest and Doctor of the Church)

பிறப்பு: ஜூன் 24, 1542
ஃபோண்டிவேரோஸ், அவிலா, ஸ்பெயின்
(Fontiveros, Ávila, Spain)

இறப்பு: டிசம்பர் 14, 1591 (வயது 49)
ஊபெதா, ஜயென், ஸ்பெயின்
(Úbeda, Jaén, Spain)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூத்தரன் திருச்சபை
(Lutheran Church)

அருளாளர் பட்டம்: ஜனவரி 25, 1675
திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்
(Pope Clement X)

புனிதர் பட்டம்: டிசம்பர் 27, 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

முக்கிய திருத்தலங்கள்:
செகோவியா, ஸ்பெயின் நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
(Tomb of Saint John of the Cross, Segovia, Spain)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 14

பாதுகாவல்:
தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறையியலாளர்கள், மறைமெய்ம்மையியல், ஸ்பெயின் நாட்டு கவிஞர்கள்

சிலுவையின் புனிதர் யோவான், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த ஸ்பேனிஷ் மறையியலாளரான இவர், கார்மேல் சபைத் துறவியும் (Carmelite friar) குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் ஸ்பேனிஷ் இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.

கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனிதர் அவிலாவின் தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட், கி.பி. 1726ம் ஆண்டு, இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

“ஜுவான் டி யேப்ஸ் எ அல்வேரெஸ்” (Juan de Yepes y Álvarez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் நாட்டின் அவிலா எனும் நகருக்கு அருகே, யூத மதத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் வழித்தோன்றல்களின் குடும்பமொன்றில் பிறந்தவராவார். அவிலாவில் பட்டு வியாபாரம் செய்து வந்த பெரும் செல்வந்தர் ஒருவருக்கு அவரது வியாபாரத்தில் கணக்கு வழக்கு பார்த்து வந்த “கொன்ஸாலோ” (Gonzalo) இவரது தந்தை ஆவார். ஒரு அனாதைப் பெண்ணான “கேட்டலினா” (Catalina) என்பவரை மணந்த “கொன்ஸாலோ” யோவான் பிறந்து மூன்று வயதே ஆன நிலையில் கி.பி. 1545ம் ஆண்டு, மரித்துப் போனார். இரண்டு வருடங்களின் பின்னர் யோவானின் மூத்த சகோதரரான லூயிஸும் மரித்துப் போனார்.

வாழ வழியறியாத 'கேட்டலினா' தமது இன்னொரு மகனான ஃபிரான்ஸிஸ்கோவையும், யோவானையும் அழைத்துக்கொண்டு கி.பி. 1548ம் ஆண்டு “அரேவாலோ” (Arévalo) என்னும் நகருக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கி.பி. 1551ம் ஆண்டு “மெதீனா” (Medina) சென்றார். அங்கே அவர் நெசவுத் தொழில் செய்தார்.

யோவான் மெதீனா நகரிலேயே ஆரம்பக் கல்வி கற்க ஆரம்பித்தார். அன்றாட உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்பட்டனர். கல்வி கற்கும்போதே அருகாமையுலுள்ள அகஸ்தீனிய துறவுச் சகோதரியரின் (Augustinian nuns) துறவு மடத்தில் உதவியாளராக பணி புரிந்தார். வளர்ந்து வந்த யோவான், அப்போது இரண்டொரு வருடங்களுக்கு முன்னரே புனித லயோலா இன்னாசியாரால் (St. Ignatius of Loyola) தொடங்கப்பட்டிருந்த புதிய சமூகமான இயேசு சபையின் பள்ளியில் “மனித நேய” கல்வி பயின்றபடியே அங்குள்ள மருத்துவமனையில் பணி புரிந்தார்.

கி.பி. 1563ம் ஆண்டு, "மத்தியாசின் புனிதர் யோவான்" (John of St. Matthias) என்று பெயர் மாற்றம் செய்தபடி கார்மேல் சபையில் இணைந்தார். கி.பி. 1564ம் ஆண்டு, “சலமான்கா” (Salamanca) பயணித்த அவர், அங்கேயுள்ள பல்கலையில் இறையியலும் தத்துவமும் பயின்றார். கி.பி. 1567ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற யோவான், மிகவும் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்ட 'கார்த்தூசியன்' (Carthusian) சபையில் இணையும் தமது விருப்பத்தை வெளியிட்டார். ஆனால், கி.பி. 1567ம் ஆண்டு, மெதீனாவுக்கு அவர் மேற்கொண்ட பயணம் இவ்விருப்பத்தை மாற்றியது. அங்கே அவர் கார்மேல் சபைத் துறவியான “இயேசுவின் தெரெசா”வைச் (Teresa of Jesus) சந்தித்தார். தெரேசாவுடன் இணைந்து பல துறவு மடங்களை தோற்றுவிக்க உதவினார்.

கி.பி. 1568ம் ஆண்டு, நவம்பர் மாதம், 28ம் நாளன்று, தமது பெயரை “சிலுவையின் யோவான்” (John of the Cross) என்று மாற்றிக்கொண்டார். கி.பி. 1574 அல்லது 1577ம் ஆண்டு, ஒருநாள் அவிலாவிலுள்ள துறவு மடத்தில் யோவான் செபித்துக் கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார். இக்காட்சியை அவர் ஒரு ஓவியமாக வரைந்தார். அவ்வோவியம் மிகவும் பிரபலமானது.

கி.பி. 1591ம் ஆண்டு, அக்கி என்னும் தோல் நோயால் (Erysipelas) பாதிக்கப்பட்ட யோவான், 'உபேடா' (Úbeda) என்னும் இடத்திலுள்ள துறவு மடத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கே அவரது நிலை மோசமானது. கி.பி. 1591ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 14ம் நாளன்று, அவர் மரித்தார்.

No comments:

Post a Comment