Friday, December 13, 2019

† புனிதர் லூசி † (டிசம்பர் 13)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 13)

✠ புனிதர் லூசி ✠
(St. Lucy)

அருட்கன்னி/ மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. 286
சிராக்குஸ் (Syracuse)

இறப்பு: கி.பி. 304
சிராக்குஸ் (Syracuse)

ஏற்கும் சபை/ சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள்:
சேன் ஜெரமியா, வெனிஸ்
(San Geremia, Venice)

சித்தரிக்கப்படும் வகை:
நூல் தண்டு; கண்கள்; தட்டில் கண்கள்; விளக்கு; வாள்கள்; புனித ஆகத்தாவுடன் ஒரு பெண்; புனிதர் ஆகத்தா கல்லறையில் ஒரு பெண் முழங்காலில் நிற்பது

பாதுகாவல்:
கண்பார்வையற்றோர்; மறைசாட்சிகள்; பெருஜியா; இத்தாலி; ம்டார்ஃபா, மால்ட்டா, தொற்று நோய்கள், விற்பனையாளர்கள், சிராக்குஸ், தொண்டை நோய்கள், எழுத்தாளர்கள்

நினைவுத் திருவிழா: டிசம்பர் 13

சிராக்குஸ் நகரின் புனிதர் லூசியா, கி.பி. 304ம் ஆண்டில், "டையோக்லெஷியானிக்" துன்புறுத்தல்களின் போது (Diocletianic Persecution) மரித்த இளம் கிறிஸ்தவ மறைசாட்சியும் புனிதரும் ஆவார். இவர் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய திருச்சபையினாரால் புனிதராக வணங்கப்படுகிறார். கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலியின்போது, பெயர் வாசித்து நினைவுகூரப்படும் அன்னை மரியாள் உள்ளிட்ட எட்டு பெண்களுள் லூசியும் ஒருவராவார்.

இந்த புனிதர், இத்தாலியின் சிசிலித் தீவில் சிராக்குஸ் எனும் ஊரில் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது தாய் நீண்ட காலமாகத் தீராத நோயால் கஷ்டப்பட்டார். எனவே ஒருநாள் அவரது உடல் நலத்திற்காகப் புனித ஆக்னஸ் திருத்தலத்தில் உருக்கமாகச் செபித்தார் லூசியா. அன்றிரவு அவரது கனவில் புனிதர் ஆகத்தா தோன்றி, உன் தாய்க்குத் தேவையான உடல்நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாக இருக்கும்போது என்னிடம் ஏன் வேண்டுகிறாய்? உனது விசுவாசமே உனக்குப் போதுமானது என்றார்.

அதன் பின்னர் லூசியாவின் தாயும் முழு குணம் அடைந்தார். இதனால் லூசியா பக்தியுள்ள கிறிஸ்தவளாக மாறினார். தனது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். தனது தாயின் அனுமதியோடு தம் உடைமைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். லூசியாவை ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் இவரது புதிய தீர்மானத்தைக் கேட்டுக் கடும் கோபமடைந்தான். எனவே அவன், லூசியா ஒரு கிறிஸ்தவள் என்று சொல்லி ரோம் உயர் அதிகாரிகளிடம் அவரைக் கையளித்தான். இவர் கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கவில்லையெனில் விலைமகளிர் விடுதியில் தள்ளப்படுவார் என எச்சரிக்கப்பட்டார்.

ஆயினும் இவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததால் ஆயிரம் ஆண்களும் ஐம்பது காளைகளும் சேர்ந்து இவரைத் தள்ளினர். ஆனாலும் அவரை அசைக்க முடியவில்லை. எனவே அவரைச் சுற்றிப் பொருட்களை நிரப்பி தீ வைத்தனர். ஆயினும் அவர் அசையாமல் நின்றார். அவர் மேல் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றினார்கள். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஆனால் அவர் எதற்கும் அஞ்சாமல் தனது மரணம் பிற கிறிஸ்தவர்களுக்குப் பயத்தைக் குறைக்கும் மற்றும் விசுவாசமற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொண்டு வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவர் இவ்வாறு பேசுவதைத் தடுக்க ஒரு வீரன் ஈட்டியால் அவள் தொண்டையைக் கிழித்தான். ஆனால் அந்த நேரத்தில் அங்கிருந்த ஓர் ரோம் அதிகாரி திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் ரோமுக்கு வரவழைக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு இறந்தான். லூசியா இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்று மறைசாட்சியாக இறந்தார். இவர் இறந்தது ஏறக்குறைய கி.பி. 310ம் ஆண்டில் என்று சொல்லப்படுகிறது.

ரோமப் பேரரசன் தியோக்கிளேசியன் காலத்தில் சுரங்கக் கல்லறைகளில் பயத்தினால் மறைந்திருந்த கிறிஸ்தவர்களுக்கு லூசியா உதவி செய்து வந்தார். அப்போது இவருக்கு இரண்டு கைகளிலும் நிறையப் பொருட்கள் இருந்ததால் பூமிக்கடியில் செல்ல வெளிச்சம் தேவைப்பட்டது. ஆதலால் தனது தலைக்கு மேல் ஒரு கீரிடம் செய்து அதில் மெழுகுதிரிகளை ஏற்றி இவர் சென்றதாகப் பாரம்பரியம் சொல்கிறது. எனவே இன்றும் லூசியாவின் விழாவான டிசம்பர் 13ம் தேதி ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒரு சிறுமி வெள்ளை அங்கி, சிவப்பு பெல்ட் அணிந்து தலையில் எரியும் மெழுகுதிரிகள் கிரீடத்துடன் பவனி செல்ல மற்ற சிறுமிகள் கைகளில் மெழுகுதிரிகளுடன் பவனி செல்கின்றனர். பெரியவர்கள் புனித லூசியாவுக்கென இயற்றப்பட்ட பாடலைப் பாடி இப்பவனியை வரவேற்று விழாக் கொண்டாடுகின்றனர்.

அன்று கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. சுவீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், லாத்வியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, மால்ட்டா, இத்தாலியின் சில பகுதிகள், போஸ்னியா, பவேரியா, குரோவேஷியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளிலும், இன்னும் ஸ்காண்டிநேவியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் வாழும் பிற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் புனித லூசியா ஓர் இளம் பெண்ணாக மெழுகுதிரிகள் மற்றும் இனிப்புகளுடன் பவனியில் வந்து மக்களை மகிழ்விக்கிறார்.

No comments:

Post a Comment