Wednesday, December 11, 2019

† புனிதர் முதலாம் டாமசஸ் † (டிசம்பர் 11)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 11)

✠ புனிதர் முதலாம் டாமசஸ் ✠
(St. Damasus I)

37ம் திருத்தந்தை:
(37th Pope)

பிறப்பு: கி.பி. 305
ரோம் நகரம், மேலை ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

இறப்பு: டிசம்பர் 11, 384
ரோம் நகரம், மேலை ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 11

பாதுகாவல்:
தொல்பொருள் ஆய்வாளர்கள்
(Archaeologists)

திருத்தந்தை புனிதர் முதலாம் டாமசஸ் (Pope St. Damasus I), கத்தோலிக்க திருச்சபையில் ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 366ம் ஆண்டு, அக்டோபர் மாதம், முதலாம் தேதி முதல், கி.பி. 384ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் தேதி வரை ஆட்சி செய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 37ம் திருத்தந்தை ஆவார்.

பிறப்பும் வளர்ப்பும்:
டாமசஸ், ரோம் நகரில் ஸ்பேனிஷ்-போர்த்துகீசிய பெற்றோருக்குப் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. டாமசஸ் சிறுபருவத்திலிருந்தே ரோமில்தான் வளர்ந்தார். இவரது தந்தையின் பெயர் “அண்டோணியஸ்” (Antonius) ஆகும். டாமசசின் தாயாரின் பெயர் “லாரென்ஷியா” (Laurentia) ஆகும். இவர் பின்னாளில் குருத்துவம் பெற்று “புனித லாரன்ஸ்” (Church of St. Lawrence (San Lorenzo) ஆலயத்தில் குருவாக சேவை புரிந்தார்.

டாமசஸ், தமது தந்தை குருவாக பணி புரிந்த ஆலயத்திலேயே திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆலயத்திலேயே அவர் குருத்துவமும் பெற்றார். இதே ஆலயம், பின்னாளில் ரோம் நகரின் புறநகர்ப் பகுதியின் பேராலயமானது. (Basilica of Saint Lawrence outside the Walls in Rome)

அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை “லிபேரியஸ்” (Pope Liberius) கி.பி. 355ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட வேளையில், திருத்தொண்டரான டாமசஸும் அவருடன் சென்றார். பின்னர் அவர் ரோமுக்குத் திரும்பிவந்து, லிபேரியசுக்குப் பதிலாக எதிர் திருத்தந்தையாகச் செயல்பட்ட இரண்டாம் பெலிக்சு என்பவரின் கீழ் பணிபுரிந்தார்.

அச்சமயத்தில் நாடுகடத்தப்பட்ட லிபேரியசின் பதவியில் யார் நியமிக்கப்பட்டாலும் அவரைத் திருத்தந்தையாக ஏற்கப் போவதில்லை என்று ரோம் குருக்களும் மக்களும் உறுதிபூண்டிருந்த போதிலும் டாமசஸ் எதிர் திருத்தந்தையை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டாமசஸ், தாம் திருத்தந்தையாகப் பதவி ஏற்ற நாளிலிருந்து திருத்தந்தையின் பதவியோடு இணைந்த அதிகாரத்தை வலியுறுத்தினார் என்பது வரலாற்று உண்மை.

திருத்தந்தையாக நியமனம் பெறல்:
நாடுகடத்தப்பட்டிருந்த திருத்தந்தை லிபேரியஸ் ரோமுக்குத் திரும்பிவந்து, மீண்டும் திருத்தந்தை பதவியில் அமர்ந்ததும், டாமசஸ் அவரோடு இணக்கம் செய்துகொண்டு, அவரது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு பணிபுரிந்தார்.

திருத்தந்தை லிபேரியஸ், கி.பி. 366ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு வாரிசாகப் புதிய திருத்தந்தையாக யாரை நியமிப்பது என்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது. டாமசஸ் திருத்தந்தை பதவிக்கு எவ்வாறு நியமனம் பெற்றார் என்பது குறித்து இரு வரலாற்று வரைவுகள் உள்ளன.

அதிக நம்பகமான வரைவு:
திருத்தந்தை லிபேரியஸ் உயிரோடு இருக்கும்வரை அவரே திருச்சபையின் தலைவர் என்று ஏற்றுகொண்டவர்கள் அவருடைய இறப்புக்குப் பின் டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா ஆலயத்தில் ஒன்றுகூடி “உர்சீனஸ்” (Deacon Ursinus) என்னும் திருத்தொண்டரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் திருநிலைப்பெற்றார்.

மற்றொரு வரலாற்று வரைவுப்படி, லிபேரியசை எதிர்த்தவர்கள் ஒன்றுகூடி உர்சீனஸ் என்பவரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.

எவ்வாறாயினும், எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்ட ஃபெலிக்சு என்பவருக்கு விசுவாசமாக இருந்த ஒரு பெரிய குழுவினர் ரோமில் உள்ள லுச்சீனா புனித லாரன்சு ஆலயத்தில் கூடி, திருத்தொண்டர் டாமசசைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர்.

திருத்தந்தை டாமசஸ் கிறிஸ்தவக் கொள்கைகளை நிலைநாட்டுதல் :
ஆட்சி அமைப்பைச் சார்ந்தவர்களும் உயர்குடியினரும் திருத்தந்தை டாமசஸுக்கு ஆதரவு அளித்தனர். அவரது அவையும் செல்வக் கொழிப்பில் திளைத்தது.

திருத்தந்தை டாமசஸ் திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் கண்டனம் செய்த தப்பறைகளுள் சில:
☆ ஆரியனிச கொள்கை (Arianism) (இயேசு கிறிஸ்து கடவுளின் படைப்பே, கடவுள் அல்ல என்னும் கொள்கை).

☆ அப்போல்லினாரியனிச (Apollinarianism) கொள்கை (இயேசு கடவுள் என்பதால் அவருக்கு மனித ஆன்மா கிடையாது என்னும் கொள்கை)

☆ மாசெடோனியனிச (Macedonianism) கொள்கை (தூய ஆவி கடவுள் அல்ல என்னும் கொள்கை)

திருத்தந்தையின் அதிகாரம் வலியுறுத்தப்படல்:
ரோமின் ஆயரும் அனைத்துலகத் திருச்சபையின் தலைவருமாக இருக்கின்ற திருத்தந்தை, இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தை இவர் மிகவும் வலியுறுத்தினார். புனித பேதுருவின் வழித்தோன்றலாக வருபவர் திருத்தந்தை என்பதால் அவருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சபையின் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக எடுத்து உரைக்கும் பொறுப்பு திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சார்ந்தது என்று டாமசுஸ் அழுத்தம் திருத்தமாகப் பறைசாற்றினார்.

திருத்தந்தை ஆற்றிய சிறப்பான பணிகளுள் சில:
☆ இவர் திருத்தந்தை மைய அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தை ஏற்படுத்தி, வரலாற்று ஏடுகள் பாதுகாக்கப்பட வழிசெய்தார்.

☆ ரோம் நகரிலும் மேற்கு ரோமப் பேரரசிலும் கிறிஸ்தவ வழிபாட்டு மொழியாக இலத்தீன் மொழியை அறிவித்தார்.

☆ கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த விவிலியத்தின் "பழைய" இலத்தீன் மொழிபெயர்ப்பை மறுபார்வையிட்டு, மூல மொழியாகிய கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டைப் புதிதாக மீண்டும் இலத்தீனில் பெயர்க்க ஏற்பாடு செய்தார். இப்பணியைத் தமது செயலராக இருந்த புனிதர் ஜெரோமிடம் ஒப்படைத்தார். அவர் பல ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் (கி.பி. 382-405) உருவாக்கிய இலத்தீன் மொழிபெயர்ப்பு "மக்கள் பதிப்பு" (இலத்தீன்: Vulgata) என்னும் பெயர் பெற்றது.

☆ முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொலை செய்யப்பட்ட மறைச்சாட்சிகள் மற்றும் திருத்தந்தையர் ஆகியோரின் கல்லறைகளை இவர் அழகுபடுத்தினார். அக்கல்லறைகளில் பதித்த பளிங்குக் கற்களில் வரலாற்றுக் குறிப்புகளை எழுதிட இவர் வழிசெய்தார்.

இறப்பும் திருவிழாவும்:
திருத்தந்தை டாமசஸ் கி.பி. 384ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாள் இறந்தார். ஆர்தெயாத்தீனா சாலை அருகே, அவரது தாயார் மற்றும் சகோதரியின் கல்லறைகளின் அருகில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அது டாமசஸ் புனித லாரன்சு ஆலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீளடக்கம் செய்யப்பட்டது.

இவருடைய நினைவுத் திருவிழா, டிசம்பர் மாதம், 11ம் நாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment