Sunday, December 1, 2019

† புனிதர் எட்மண்ட் கேம்பியன் † (டிசம்பர் 1)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 1)

✠ புனிதர் எட்மண்ட் கேம்பியன் ✠
(St. Edmund Campion)

மறைப்பணியாளர், கத்தோலிக்க குரு, மறைசாட்சி:
(Religious, Priest and Martyr)

பிறப்பு: ஜனவரி 24, 1540
லண்டன், இங்கிலாந்து அரசு
(London, Kingdom of England)

இறப்பு: டிசம்பர் 1, 1581 (வயது 41)
டைபர்ன், இங்கிலாந்து அரசு
(Tyburn, Kingdom of England)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: டிசம்பர் 9, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம்: அக்டோபர் 25, 1970
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பால்
(Pope Blessed Paul VI)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 1

இங்கிலாந்து நாட்டில், கி.பி. 1581ம் ஆண்டு, டிசம்பர் முதல் தேதி, 41 வயது நிறைந்த இயேசு சபை அருள் பணியாளர் ஒருவர் தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். “டைபர்ன்” (Tyburn) எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவரது உடல் நான்கு கூறுகளாக வெட்டப்பட்டபோது, அருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளையவரின் உடையில், கொல்லப்பட்ட அருட்பணியாளரின் இரத்தத் துளிகள் விழுந்தன. அந்த இளையவர் இந்தக் காட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அந்த உடையை ஒரு புனிதப் பொருளாகக் காத்ததோடு, அவரும் ஒரு சில ஆண்டுகள் கழித்து, இயேசு சபையில் இணைந்து, மறைசாட்சியாக மரணம் அடைந்தார். அந்த இளையவரின் பெயர், வணக்கத்திற்குரிய (Henry Walpole). அவரது உடையில் சிந்திய இரத்தத்திற்குச் சொந்தக் காரர், புனிதர் எட்மண்ட் கேம்பியன் (Edmund Campion).

புனிதர் எட்மண்ட் கேம்பியன், ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்க “இயேசுசபை” (Jesuit) குருவும், மறைசாட்சியுமாவார். இங்கிலாந்து நாட்டில், இரகசிய நற்செய்தி பரப்பும் ஊழியம் செய்துகொண்டிருந்த வேளையில், பிரிட்டிஷ் அரசின் படைகள் (British forces) சார்பில் கத்தோலிக்க குருக்களை உளவு பார்க்கும் அலுவர்களால் கைது செய்யப்பட்டு, தேசவிரோத குற்றம் சாட்டப்பட்ட கேம்பியன், மரணதண்டனை விதிக்கப்பட்டு, “லண்டன்” (London) மாநகரிலுள்ள “டைபர்ன்” (Tyburn) எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு, நான்காக வெட்டப்பட்டு, குரூரமாக கொல்லப்பட்டார்.

கி.பி. 1540ம் ஆண்டு, ஜனவரி மாதம், 24ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட், புனித சின்னப்பர் (St. Paul's Cathedral) தேவாலயத்தினருகே புத்தகம் விற்பனை செய்பவரின் மகனாவார். “கிறிஸ்துவின் மருத்துவமனை (Christ's Hospital school) பள்ளியில் ஆரம்ப கல்வி கற்ற இவர், தமது பதின்மூன்று வயதில், கி.பி. 1553ம் வருடம், ஆகஸ்ட் மாதம், நகருக்கு வருகை தந்த இங்கிலாந்து அரசி “முதலாம் மேரி” (Queen Mary I of England) அவர்களுக்கு வரவேற்புரை வழங்கத் தெரிவு செய்யப்பட்டார்.

தமது அறிவுத்திறனால் பேரும், புகழும் பெற்ற இவர், “ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள செயின்ட் ஜான் (St John's College, Oxford) கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். இரண்டு வருடங்களின் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த இங்கிலாந்து அரசி “முதலாம் எலிசபெத்” (Queen Elizabeth I of England) அவர்களுக்கு வரவேற்புரையாற்றினார். அரசியின் நீடித்த மதிப்பை வென்றார். அரசியின் முன்னிலையில் நடந்த ஒரு பொது விவாதத்தில் தலைமையேற்கும் சந்தர்ப்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

மதக்கலவரங்கள் எழுந்திருந்த அக்காலத்தில், கத்தோலிக்க கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், கி.பி. 1564ம் ஆண்டு, “ரிச்சர்ட்” (Richard Cheyney) எனும் ஆங்கிலிக்கன் ஆயரின் தூண்டுதலின் பேரில், ஆங்கிலிக்கன் திருச்சபையின் திருத்தொண்டராக (Deacon) பதவியேற்றார். கி.பி. 1569ம் ஆண்டு, ஆக்ஸ்ஃபோர்ட் விட்டு சென்ற எட்மண்ட், தமது தனிப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக “அயர்லாந்து” (Ireland) சென்றார்.

இவருக்கு அயர்லாந்தில், அந்நாட்டின் பாராளுமன்றத்தின் (Irish House of Commons) சபாநாயகரான “ஜேம்ஸ்” (James Stanyhurst) என்பவரின் மகனான “ரிச்சர்ட்” (Richard Stanihurst) என்பவருக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பு தரப்பட்டது.

கி.பி. 1571ம் ஆண்டு, அயர்லாந்திலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற கேம்பியன், தற்போதைய வடக்கு ஃபிரான்சிலுள்ள “டோவாய்” (Douai) சென்றார். அங்கே, கத்தோலிக்க திருச்சபையுடன் சமரசம் செய்துகொண்டார். கடந்த பன்னிரண்டு வருடங்களாக தாம் மறுத்து வந்த தூய நற்கருனையைப் பெற்றார். “வில்லியம் ஆலன்” (William Allen) நிறுவிய “ஆங்கிலேய” (English College) கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் துணை திருத்தொண்டரானார்.

தன் வாழ்வை, ஆங்கிலிக்கன் சபையில் ஆரம்பித்த எட்மண்ட், பின்னர், கத்தோலிக்க மறையைத் தழுவினார். இயேசு சபையில் சேரவிழைந்த இவர், தன் 33வது வயதில், ரோம் நகர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்ற இவர், “ப்ராக்” (Prague) நகரிலுள்ள இயேசுசபை கல்லூரியில் ஆறு வருடங்கள் சொல்லாட்சி மற்றும் தத்துவம் (Rhetoric and Philosophy) கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.

கி.பி. 1580ம் ஆண்டு, இயேசுசபையினரின் இங்கிலாந்து நாட்டுக்கான மறைப்பணிகள் தொடங்கின. கண்டிப்பாக தடை செய்யப்பட்ட இத்திட்டத்துக்கு, எட்மண்ட், அருட்தந்தை “ராபர்ட்” (Fr. Robert Persons) என்பவருடன் உடன் சென்றார். அருட்பணியாளரான எட்மண்ட், மீண்டும் கி.பி. 1580ம் ஆண்டு, ஜூன் மாதம், ஒரு வைர வர்த்தகரைப் போல வேடமணிந்து இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இங்கிலாந்து நாட்டில், கத்தோலிக்க மறைக்கு எதிராக எழுந்த கலவரங்களால் கத்தோலிக்க மக்கள் மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் எட்மண்ட் கடினமாக உழைத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மறைவாக இரகசிய மறைபோதகம் செய்தார். கி.பி. 1581ம் ஆண்டு, “ஜார்ஜ் எலியட்” (George Eliot) என்ற உளவாளியால் கைது செய்யப்பட்ட இவர், கை விலங்கிடப்பட்டு லண்டன் கொண்டுவரப்பட்டார். “லண்டன் டவர்” (Tower of London) என்றழைக்கப்படும் சிறைச்சாலையில் நான்கு நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், வெளியே அழைத்து வரப்பட்ட இவரிடம் நகரின் மூன்று பிரபுக்கள் விசாரணை நடத்தினர். அரசி எலிசபெத் இங்கிலாந்தின் உண்மையான அரசி என்று ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். அவ்வாறு செய்யும் பட்சத்தில், சுதந்திரம், பணம் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் அவருக்கு “கேண்டர்பரி பேராயர்” (Archbishopric of Canterbury) பதவி கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் அவற்றை ஏற்காத கேம்பியன், லண்டன் டவர் சிறைச் சாலையில் தனிமை சிறையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டு, கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளானார்.

அதன்பின்னர் நீதிமன்ற விசாரனைகளுக்குள்ளான கேம்பியன் மற்றும் பிற அருட்தந்தையருக்கு தலைமை நீதிபதி “வ்ரே” (Lord Chief Justice Wray) என்பவரால் பின்வரும் தண்டனை வாசிக்கப்பட்டது:

“நீங்களனைவரும் தூக்கிலிடப்படும் நாள்வரை, எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே கொண்டுபோகப்படுவீர்கள். உங்களை தூக்கிலிடப்படும் நாளன்று, நீங்கள் லண்டன் மாநகர வீதிகளில் இழுத்துச் செல்லப்படுவீர்கள். உங்களை தூக்கிலிடுவார்கள்; ஆனால், உயிருடனேயே நீங்கள் கழுமரத்திளிருந்து இறக்கப்படுவீர்கள். உங்களுடைய உடலின் மறைவான பாகங்கள் வெட்டி எறியப்படும். உங்களுடைய குடல் வெளியே எடுக்கப்பட்டு, உங்கள் கண் முன்னாலேயே எரிக்கப்படும். பிறகு, உங்கள் தலை வெட்டப்படும். மகாராணியின் மாட்சிமையின் மகிழ்ச்சிக்காக, உங்கள் உடல் நான்கு பாகங்களாக வெட்டப்படும். கடவுள் உங்கள் ஆன்மாவுக்கு இரக்கம் காட்டுவாராக.”

டிசம்பர் 1ம் தேதியன்று, எட்மண்ட் கேம்பியன், இரு அருட்தந்தையர் “ரால்ஃப் ஷெர்வின்” மற்றும் “அலெக்சாண்டர் பிரியன்ட்” (Fathers Ralph Sherwin and Alexander Briant) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்ட தண்டனை அப்படியே நிறைவேற்றப்பட்டது. மறைசாட்சியாக மரணம் அடைந்தார்.

திருத்தந்தை “13ம் லியோ” (Pope Leo XIII) அவர்கள், கேம்பியனுக்கு கி.பி. 1886ம் ஆண்டு முக்திப்பேறு பட்டமளித்தார். 1970ம் ஆண்டு, திருத்தந்தை அருளாளர் “6ம் பவுல்” (Pope Paul VI) அவர்கள், “இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்” நாடுகளின் நாற்பது மறைசாட்சியர்களுள் ஒருவராக, எட்மண்ட் கேம்பியனுக்கு புனிதர் பட்டம் அளித்தார். புனிதர் எட்மண்ட் கேம்பியன் அவர்களின் நினைவுத் திருநாள் டிசம்பர் மாதம், முதல் தேதி கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment