† இன்றைய திருவிழா †
(நவம்பர் 2)
✠ மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் ✠
(All Souls’ Day)
நினைவுத் திருவிழா: நவம்பர் 2
நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப் போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் புதுப் பொலிவுடன் தோற்றம் தருகின்றன. கல்லறைகளைச் சுத்தம் செய்து வெள்ளையடித்தல், கல்லறைகளை சந்தித்தல், இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றல், இறந்தவர்களை நினைத்து சிறப்பு அன்னதானம் வழங்கல்.... இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால் கார்த்திகை மாதம் முக்கியமானதாக அமைந்துவிடுகின்றது.
ஏன் இந்தக் கொண்டாட்டங்கள். ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? எதற்காக நாம் இறந்தவர்களை நினைவு கூறுகின்றோம். அனைத்து ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக் கற்றுத்தருகின்றது.
மரித்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) என்பது, சில கிறிசதவ சபைகள் மரித்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறிஸ்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.
கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும், ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன.
✠ தூய்மை பெறும் நிலை:
தூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்பு நிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையின்படி, மரிக்கும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் மரித்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மைபெற்று முதிர்ச்சியடைய கடவுளால் அளிக்கப்படும் வாய்ப்பு ஆகும். இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும் முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர். இத்தகையோருக்கு கத்தோலிக்க திருச்சபையினர் இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுதும் இந்த நிலையில் இருப்போருக்காக கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லரைகளுக்குச்சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது.
✠ தூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கை:
இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" (purgatory) பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.
தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது:
தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்
இந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை "உத்தரிக்கிற ஸ்தலம்" அல்லது "உத்தரிப்பு ஸ்தலம்" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும்.
இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.
✠ விழாக் கொண்டாடும் நாள்:
கத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவுகூரப்படுகின்றது. இது, அனைத்து புனிதர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ம் ஆண்டு நிகழ்ந்தது போல, அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.
கிழக்கு மரபுவழி திருச்சபை, இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.
✠ வேண்டாம் மரணம்:
மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம் முதல், விபத்து மற்றும் தற்கொலை வரை ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் வராமல் இருந்ததில்லை. இதனால்தான் மரணம் என்றதுமே எல்லோருக்கும் இயல்பான ஒரு பயம் ஏற்படுகின்றது. மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணமா? அது வேண்டாம் என்று எண்ணுவோரே அதிகம். காரணம், மரணம் வாழ்வின் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும். மரணம் எனக்கு வேண்டாம் என்று தப்பித்துக்கொள்ள முடியாது. மாறாக அனைத்து உயிர்களும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டியது வாழ்வின் எதார்த்தம்.
ஆகவே நவம்பர் மாதம் 2ம் தேதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக, அதாவது மரித்தோர் தினமாக திருச்சபை சிறப்பித்து வருகின்றது. பாமர மக்கள் இதைக் கல்லறைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். எவ்வாறு இவ்விழா வழக்கத்திற்கு வந்தது என்பதை சற்று பார்ப்போம்.
தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும் இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை ரோமில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.
வேத கலாபனைகளில் மறைசாட்சிகளாக மரித்தவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின் கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப் போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும் மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில் இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர். இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில் கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.
கி. பி. 998ம் ஆண்டில், புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.
11ம் நூற்றாண்டில் மரித்தவர்களுக்காக மன்றாடும் குளுனி சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை கி.பி 13ம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட அனுமதி
வழங்கியது.
✠ இறந்தவர்களுக்காக மன்றாடுதல்:
இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் விவிலிய வழக்கமாகும். இது மக்கபேயர் காலத்திலிருந்து வருகின்றது.(2மக் 12:43-45) யூதா, மக்கபே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலி ஒப்புக் கொடுக்க எருசலேமிற்கு ஆள்களை அனுப்பினார். இந்த மரபு புனித பவுலின் காலத்தில் இயேசு வழியாக இறந்தவர்கள் மீட்பைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருந்தோர் அவர்கள் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர் (1கொரி 15:29). இதன் பின்னணியில்தான் காலப்போக்கில் இறந்தவர்களுக்காகச் செபிக்கும் பழக்கமும், கல்லறைத் தோட்டச் சந்திப்புக்களும், திருப்பலி ஒப்புக் கொடுக்கும் பழக்கமும் தாய் திருச்சபையின் மரபில் வளர்ந்தது.
பழைய ஏற்பாட்டு பலிகளைவிட இயேசுவின் ஒப்புயர்வற்ற கல்வாரிப்பலி அனைத்து பாவங்களையும் போக்குகின்றது. எனவேதான் நவம்பர் மாதம் இறந்தவர்களுக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. ஆகவே நவம்பர் மாதம் ஏன் நாம் இறந்த ஆன்மாக்களின் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது எமக்கு தெளிவாகின்றது. எனவே இறந்தவர்களை நினைத்து நாமும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்.
நன்றி :
Gateway of Christianity
No comments:
Post a Comment