† மறைசாட்சிகளின் இரத்தம் - திருச்சபையின் வித்து †
(நவம்பர் 1)
✠ Blood of Martyrs - The Seed of the Church ✠
(November 1)
† யார் இந்தப் புனிதர்கள்? †
கடந்த 2015ம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் நாளன்று, திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள், இலங்கையின் அப்போஸ்தலரான “ஜோசப் வாஸ்” (Joseph Vaz) அவர்களுக்கு “புனிதர் பட்டம்" அளித்தார். “ஒல்லாந்தர்” (Dutch) காலத்தில் கத்தோலிக்க மதம் அழிவுறும் நிலையில் இருந்தபோதும் இலங்கை கத்தோலிக்கருக்குப் பணிபுரிய தம் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணிக்கும்படியாக அயலவர் நலன் பேணுவதிலும், இறைவனின் திட்டத்தை செயற்படுத்தினதால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். நாம் நம்பிக்கையோடு சொல்லுகின்ற விசுவாச அறிக்கையிலும், புனிதர்கள் இடம் பெறுகிறார்கள். நமது இறை - மனித உறவின் உச்சமாக உள்ள திருவிருந்து கொண்டாட்டங்களிலும், புனிதர்கள், நீங்கா இடம் பெறுகிறார்கள். இவ்வாறாக அன்னை மரியாள், வானதூதர்கள் தொடங்கி கத்தோலிக்க திருச்சபையில் ஏறக்குறைய 7000 புனிதர்கள் மற்றும் அருளாளர்களும் உள்ளனர்.
எமது கத்தோலிக்க திருச்சபை, புனிதர்களை தேர்ந்தெடுத்து உருவாக்குவதில்லை. மாறாக, சில மனிதர்களை புனிதர்கள் என அழைத்து அவர்களது வாழ்க்கையை நமக்கு முன்மாதிரிகையாக நிறுத்துகின்றது.
ஒருவரது வாழ்க்கையை நன்கு ஆய்ந்து அறிந்த பின்பு, அவர் 'வணக்கத்துக்குரியவர்" என்கின்ற பட்டத்தை அளிக்கிறது. அவர்கள் வழியாக ஒரு புதுமை நடந்தால் அவரை 'அருளாளர்" என அழைக்கிறது. அதே அருளாளரால் இரண்டாவது புதுமையும் நடந்தது என்று உறுதி செய்யப்பட்டால், அவரை புனிதர் என அழைக்கிறது.
புனிதர்களிலே இரத்தம் சிந்திய புனிதர்கள், மறைசாட்சிகள், மறைபரப்புப் பணி செய்த புனிதர்கள், கிறிஸ்துவுக்காகத் தங்களையே தியாகம் செய்த புனிதர்கள், கிறிஸ்துவுக்காக தங்களது கற்பையே காணிக்கையாக்கிய புனிதர்கள் எனத் தாங்கள் வாழ்ந்த சூழல்களிலே இன்னொரு கிறிஸ்துவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பிறருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார்கள். ஆகவே நாமும் நாம் வாழும் உலகிலே புனிதர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல இருப்போம், ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும் (1 யோவான் 3:2-3). புனிதர்களுக்கு விழா எடுக்கும் நாம் அவர்களை அலசி ஆய்வது சிறந்தது.
வேதசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்று சொல்லுவார்கள். இவர்களில், தங்கள் சாட்சிய வாழ்வினால் விசுவாசத்திற்கு உயிரைக் கொடுத்தவர்கள், தூய ஸ்தேவான், தோமா, யாக்கோபு, அருளானந்தர் போன்றோர்.
நற்செய்தியை எட்டுத்திசைக்கும் எடுத்துரைத்தவர்கள்: தூய பவுல், பர்னபா, சவேரியார் போன்றோர்.
குடும்ப வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள்: தூய அன்னம்மாள், மோனிக்கா போன்றோர்.
சீர்த்திருத்தவாதிகளாக மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்கள்: தூய கிரகோரியார், லொயோலா இஞ்ஞாசியார், அவிலா தெரசாள் போன்றோர்.
தவறுகளைக் கண்டித்து சீர்த்திருத்தியவர்கள்: தூய திருமுழுக்கு யோவான், சிரில் போன்றோர்.
செப வாழ்விலே இறைவனை மகிமைப்படுத்தியவர்கள்: தூய குழந்தை தெரசாள், பதுவை அந்தோனியார், தோமினிக் சாவியோ, ஃபிரான்சிஸ் அசிசி போன்றோர்.
பிறரன்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியவர்கள்: தூய ஜான் போஸ்கோ, வின்சென்ட் தே பவுல், மேக்சி-மிலியன் கோல்பே போன்றோர்.
இவ்வாறு எண்ணற்ற புனிதர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையை தங்கள் திறமைகளுக்கும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப வாழ்ந்து நம்மை அத்தகைய வாழ்வு வாழ எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்பதை இரண்டாம் வத்திக்கன் சங்கம் “தூய கன்னி” தம் வாழ்வால் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரிகையாய் உள்ளார் (திருச்சபை எண் 65) என்றும், புனிதர்களின் வாழ்விலே மாதிரிகையையும், அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும், அவர்கள் பரிந்து பேசுவதால், உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகிறோம் (திருச்சபை எண் 51) என்றும் கூறுகிறது. புனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனை மகிமைப்படுத்தினர். “நீங்கள் உண்டாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்" (1 கொரி 10:31). “மேலும் நம் நற்செயல்களைக் கண்டு மனிதர் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழவேண்டும்” (மத் 5:16) என்ற விவிலிய வரிகளுக்கேற்ப வாழ்ந்தார்கள்.
நமது அன்றாட வாழ்விலே இறை நம்பிக்கை தளர்ச்சியுறும்போது நாம் புனிதர்களின் பரிந்துரையை ஏன் வேண்டுகிறோம்? இயேசு கிறிஸ்துவே நமக்கு எல்லாம் என்றிருக்கும்போது புனிதர்களின் பரிந்துரை தேவையா? என்று பிரிவினை சகோதரர்கள் கேட்பர்.
இந்தக் கேள்விக்கு விவிலியப் பின்னணியிலிருந்து விளக்கம் தர முடியும். ஆபிரகாமின் பரிந்துரையால் லோத்தின் குடும்பம் காப்பாற்றப்பட்டது (தொ.நூல் 18:29) மோசேயின் வேண்டுதலால் இஸ்ராயேல் மக்கள் பசி பற்றாக்குறை, கொடிய நோய், எதிரியின் தாக்குதல் போன்றவற்றிலிருந்து காப்பற்றப்பட்டனர் என விடுதலைப்பயண நூலில் பார்க்கிறோம். தூய பேதுருவும், பவுலும் போதனைப் பணியின்போது சிறையுண்டபோதெல்லாம் ஆதித்திருச்சபை அவர்களுக்காகச் செபித்தது (தி.பா. 12:15). உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும். அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன்மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர். விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும் (யாக் 5:14-15).
இவ்வாறாக புனிதர்களின் பரிந்துரையால் எண்ணற்ற நன்மைகள் கிடைத்ததை திருச்சபை வரலாறு நமக்குக் காட்டுகிறது. புனிதர்களை விசுவசிப்போம். புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம்.
நன்றி :
Gateway of Christianity
நவம்பர் 1, 2015
No comments:
Post a Comment