Sunday, November 17, 2019

† ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் † (நவம்பர் 17)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 17)

✠ ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் ✠
(St. Elizabeth of Hungary)

கைம்பெண்/ மறைபணியாளர்:
(Widow and religious)

பிறப்பு: ஜூலை 7, 1207
போஸ்ஸோனி, ஹங்கேரி அரசு
(Pozsony, Kingdom of Hungary)

இறப்பு: நவம்பர் 17, 1231 (வயது 24)
மார்பர்க், புனித ரோம பேரரசு, (தற்போதைய ஜெர்மனி)
(Marburg, Holy Roman Empire (Modern-day, Germany)

சார்ந்துள்ள சமயம்/ சபை:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் பட்டம்: மே 27, 1235
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

நினைவுத் திருவிழா: நவம்பர் 17

பாதுகாவல்:
மருத்துவமனைகள், செவிலியர், விதவையர், நாடு கடத்தும் தண்டனை, மணப்பெண், ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள், இறக்கும் குழந்தைகள், கைம்பெண்கள், சரிகை-தயாரிப்பாளர்கள், தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபை (Third Order of Saint Francis)

ஹங்கேரியின் புனிதர் எலிசபெத், "துரிங்கியாவின் புனிதர் எலிசபெத்" (Saint Elizabeth of Thuringia) என்றும் அறியப்படுபவர் ஆவார். “ஹங்கேரி அரசு” (Kingdom of Hungary), “துரிங்கியா” (Thuringia) மற்றும் “ஜெர்மனி” (Germany) ஆகிய நாடுகளின் இளவரசியான இவர், பெரிதும் போற்றப்படும் கத்தோலிக்க புனிதர் ஆவார். புனிதர் ஃபிரான்ஸிஸின் மூன்றாம் நிலை சபையின் (Third Order of St. Francis) ஆதிகால அங்கத்தினரான எலிசபெத், அச்சபையின் பாதுகாவலரும் ஆவார்.

ஹங்கேரி நாட்டின் அரசன் “இரண்டாம் ஆண்ட்ரூ” (King Andrew II of Hungary) இவரது தந்தை ஆவார். “மெரனியாவின் கேட்ரூ” (Gertrude of Merania) எலிசபெத்தின் தாயாராவர்.

தமது பதினான்கு வயதில் குறுநில மன்னரான “நான்காம் லூயிஸை” (Louis IV) திருமணம் செய்த எலிசபெத், இருபது வயதில் விதவையும் ஆனார். ஆறாவது சிலுவைப்போரில் (Sixth Crusade) பங்கேற்பதற்காக இத்தாலி பயணித்த லூயிஸ், வழியில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1227ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் நாள், மரணமடைந்தார். தமது கணவரின் மரணத்தின் பின்னர், தமக்கான வரதட்சினை பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட இவர், அந்த பணத்தில் ஓர் மருத்துவமனையை கட்டினார். தாமே சுயமாக நோயாளிகளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.

ஓய்வு, ஆடம்பரம் மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இயன்ற போதும், எலிசபெத் தவம் மற்றும் சந்நியாச வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார். இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொது மக்கள் இதயத்தில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.

எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார்.

எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவ தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். இதனால் அநேகர் இவருக்கு எதிரிகள் ஆயினர். இவருடைய கணவரது சகோதரி அக்னேஸ் இவரை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவரை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள். அவரை அரண்மனையிலிருந்தே துரத்தினார்கள்.

இவர் தமது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. ஏழைகள் மீது இவர் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தார். "ஏழைகளின் அன்னை" என்றும் "நோயாளிகளின் ஊழியக்காரி" என்றும் இவரை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவர் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்து இயேசுவையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தார்.

நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அளித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளை நோயும் வந்தன. ஒரு மருத்துவமனையைக் கட்டி அங்குபோய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்தார். அப்பமும் இரசமும் இவரது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார்.

இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் துறவிகளின் ஆலயத்திற்குச் சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி "தேதேயும்" என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாடினார்.

தமது இருபத்துநான்கு வயதில் மரணமடைந்த எலிசபெத், கிறிஸ்தவ தொண்டிற்கு ஒரு அடையாளமாக ஆனார். தமது மரணத்தின் பின், விரைவில் புனிதராக அருட்பொழிவும் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment