Tuesday, November 12, 2019

† புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச் † (நவம்பர் 12)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 12)

✠ புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச் ✠
(St. Josaphat Kuntsevych)

போலோஸ்க் பேராயர் மற்றும் மறைச்சாட்சி:
(Polotsk Archbishop and Martyr)

பிறப்பு: கி.பி. 1580
வோலோடிமீர், வோல்ஹைனிய வைவோடேஷிப், போலிஷ்-லித்துவானிய கூட்டமைப்பு
(Volodymyr, Volhynian Voivodeship, Polish–Lithuanian Commonwealth)

இறப்பு: நவம்பர் 12, 1623
வித்டேப்ஸ்க், போலிய-லித்துவானிய கூட்டமைப்பு
(Vitebsk, Vitebsk Voivodeship, Polish-Lithuanian Commonwealth)

ஏற்கும் சமயம்:
உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Ukrainian Greek Catholic Church)
லத்தீன் திருச்சபை
(Latin Church)
ரோமானியன் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Romanian Greek Catholic Church)
ருத்தேனிய கத்தோலிக்க திருச்சபை
(Ruthenian Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 16, 1643
திருத்தந்தை எட்டாம் அர்பன்
(Pope Urban VIII)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

பாதுகாவல்: உக்ரைன் (Ukraine)

நினைவுத் திருவிழா: நவம்பர் 12

“லோவன் குன்ட்சேவிச்” (Loann Kuntsevych) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசஃபட் குன்ட்சேவிச், ஒரு “போலிஷ்-லிதுவேனியன்” (Polish-Lithuanian monk) துறவியும், புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர் துறந்தவரும் ஆவார்.

கி.பி. 1623ம் ஆண்டு, நவம்பர் 12ம் நாள் அவர் கிறிஸ்தவமறை விசுவாசத்துக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இவருக்கு கத்தோலிக்க திருச்சபை, புனிதர் பட்டமும் மறைச்சாட்சி பட்டமும் அளித்துள்ளது.

வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்:
கி.பி. 1580ம் ஆண்டு,  அல்லது கி.பி. 1584ம் ஆண்டு பிறந்த இவருக்கு திருமுழுக்கின்போது அளிக்கப்பட்ட பெயர் "லோவன் குன்ட்சேவிச்" ஆகும். வோல்னியா பகுதி இவர் வாழ்ந்த காலத்தில் போலிஷ் - லித்துவானிய கூட்டமைப்பின்கீழ் இருந்தது. இவர் பிறந்த நகரின் பெயர் “வொலோடிமிர்” (Volodymyr), தற்போதைய “உக்ரைன்” (Ukraine) ஆகும்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் “பிரெஸ்ட் உடன்பாடு” (Union of Brest) என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1596ம் ஆண்டில் நிகழ்ந்தது. இதன்படி, உக்ரைன் கிரேக்க மரபுவழி சபையானது, கத்தோலிக்க திருச்சபையோடு இணைய முன்வந்தது. மரபுவழி திருச்சபையில் பிறந்த லோவன் குன்ட்சேவிச், முதலில் “வில்னியஸ்” (Vilnius) நகரிலுள்ள புனிதர் “மகா பாசில்” (Order of Saint Basil the Great) துறவற சபையில் சேர்ந்தார். பின்னர் கி.பி. 1609ம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையில் குருத்துவம் பெற்றார்.

திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தல்:
துறவற சபையில் சேர்ந்தபோது அவர் லோவன் என்ற தம் பெயரை "ஜோசஃபட்" (Josaphat) என்று மாற்றிக்கொண்டார். அவருடைய வாழ்க்கைக் குறிக்கோளே திருச்சபையில் ஒற்றுமையைக் கொணர்வதாக அமைந்தது. பண்டைக்காலத் திருச்சபையின் வழிபாட்டு முறைகள், திருச்சபைத் தந்தையர்களின் படிப்பினைகள் ஆகியவற்றையும் வரலாற்றையும் ஊன்றிப் பயின்ற ஜோசஃபட், ஆண்டவர் இயேசு நிறுவிய திருச்சபையில் பேதுருவின் வாரிசாக வருகின்ற திருத்தந்தைக்கு ஒரு முக்கிய இடம் ஒன்று உண்டு என்றும், அவருடைய தலைமையின் கீழ் திருச்சபை முறையாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

கி.பி. 1617ம் ஆண்டு, ஜோசஃபட்டுக்கு ஆயர் பட்டம் வழங்கப்பட்டது. கி.பி. 1618ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் அவர் போலோஸ்க் என்னும் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ரோமத் திருச்சபையோடு உக்ரேய்ன் மரபுவழி திருச்சபையை ஒன்றுபடுத்தும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். பலர் அவருடைய முயற்சியை எதிர்த்தனர்.

ஆயர் ஜோசஃபட் பல கோவில்களைப் புதுப்பித்தார். குருக்களின் கல்வியறிவை வளர்க்க அவர் ஒரு மறைக்கல்வி நூல் எழுதினார். குருக்களின் வாழ்வுக்கான நெறிகளை வழங்கினார். தமது மறைமாவட்டத்தைச் சார்ந்த நகரங்களில் மறை மன்றங்கள் நிறுவ ஏற்பாடு செய்தார். கீழை மரபுவழி சபைகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் வழங்கியது அவருக்கு விருப்பமாக இருக்கவில்லை.

அவருடைய ஆயர் பணிக்காலம் முழுவதிலும் அவர் ஒரு துறவிக்கான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து கடவுள் மட்டில் தமது பக்தியையும் மக்கள் மட்டில் தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்.

எதிர்ப்பு:
கத்தோலிக்க திருச்சபைக்கும், உக்ரேனிய மரபுவழி திருச்சபைக்கும் இடையே ஒற்றுமை கொணர ஜோசஃபட் உழைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. பலர் ஒற்றுமை வழியை ஆதரித்தனர். ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர். அவர் உக்ரேனிய சபையை முற்றிலுமாக உரோமை மயமாக்க முயற்சி செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டினர். தம் ஆயர் பணியை நிறைவேற்றுவதற்காக அவர் மொகிலேவ் நகருக்குச் சென்றபோது அவருடைய எதிரிகள் அவரை எதிர்த்தனர். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

ஜோசஃபட்டின் மறைச்சாட்சி மரணம்:
கி.பி. 1623ம் ஆண்டில், ஜோசஃபட்டின் எதிரிகளுள் ஒருவர் ஆயரின் இருப்பிடம் சென்று அவரை கடுமையான வார்த்தைகள் கூறி இகழ்ந்தார். இதனால் அக்குருவை அகற்றி ஓரிடத்தில் வைத்திருந்தனர். அதற்கு எதிர்வினையாக உடனே நகரத்தின் மணி ஒலிக்கப்பட்டது. மக்கள் கும்பல் ஒன்று திரண்டு வந்து, ஆயரின் இருப்பிடத்தை வன்முறையாகத் தாக்கியது. அவரை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய உடல் ஆற்றில் வீசி எறியப்பட்டது. பல நாட்களுக்குப் பின் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜோசஃபட்டின் பக்தி வாழ்வு:
ஜோசஃபட் சிறுவயதிலிருந்தே மிகுந்த இறைபக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்தமான இறைவேண்டல் கீழைத் திருச்சபையின் துறவற இல்லங்களில் வழக்கமாக பயன்பட்ட ஒரு வேண்டல் ஆகும்.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்!" என்னும் அந்த இறைவேண்டலை அவர் அடிக்கடி செபித்து வந்தார். அவர் புலால் உணவு அருந்தியதில்லை. விரதம் இருப்பதும் உடலை ஒறுப்பதும் அவரது வழக்கம். வெறும் தரையில் உறங்கினார். ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX), ஜோசஃபட்டுக்கு கி.பி. 1867ம் ஆண்டு, ஜூன் மாதம், 29ம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

No comments:

Post a Comment