Friday, November 1, 2019

† அனைத்து புனிதர் பெருவிழா † (நவம்பர் 1)

† இன்றைய திருவிழா †
(நவம்பர் 1)

✠ அனைத்து புனிதர் பெருவிழா ✠
(ALL SAINTS’ DAY)

கடைபிடிக்கும் சமயம்/ சபைகள்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
மெதடிசம்
(Methadism)
மற்றும் பல கிறிஸ்தவ எதிர் திருச்சபைகள்
(Various Protestant denominations)

அனுசரிக்கும் நாள்:
மேற்கு கிறிஸ்தவம் = நவம்பர் 1
கிழக்கு கிறிஸ்தவம் = தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு
"கல்தேயாவின் ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்" மற்றும் "கிழக்கு கத்தோலிக்கம்" தொடர்புடைய திருச்சபைகள் = “உயிர்த்தெழுதல் ஞாயிறுக்குப்” பிந்தைய முதல் வெள்ளிக்கிழமை.

இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள்; உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டியாகவும் நின்றவர்கள்; தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்று வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லது புனிதர்களாக அடையாளப்படுத்துகிறது கத்தோலிக்கத் திருச்சபை.

அனைத்து புனிதர் பெருவிழா (All Saints' Day அல்லது All Hallows Day அல்லது Solemnity/Feast of All Saints) என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறிஸ்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும், கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு (Pentecost) அடுத்து வரும் ஞாயிறு அன்றும், "கல்தேயாவின் ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்" (Oriental Orthodox churches of Chaldea) மற்றும் "கிழக்கு கத்தோலிக்கம்" (Eastern Catholic) தொடர்புடைய திருச்சபைகள் “உயிர்த்தெழுதல் ஞாயிறுக்குப்” (Easter) பிந்தைய முதல் வெள்ளிக்கிழமையன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள், எட்டாம் நூற்றாண்டில் “திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின்” (Pope Gregory III (731–741) காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும், இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால் வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே. வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக கொண்டாடப்படுவதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.

இன்று நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும், மாட்சிமையையும் திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, என்ன முடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள். இந்த நம் சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம். புனிதரின் சமுதீத பிரயோசனத்தால் இவர்களுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன் வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும். எளிய மனத்தோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும் புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும் பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாறுதல் காணவேண்டும்.

"கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை'' (யோவான் 1:18). ஆனால் நம்மிடையே மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக மாறியவர்களின் வழியாகத்தான் இறைவன் தமது மாட்சியை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறைமகன் வாக்குக்கு சாட்சியாக வாழ்ந்தவர்கள் புனிதர்கள்.

இயேசுவின் சீடரான தூய இராயப்பர் (பேதுரு) தொடங்கி இந்தியாவின் முதல் புனிதையான தூய அல்போன்சம்மா வரை மேற்கண்ட இறைவார்த்தையாக வாழ்ந்து மறைந்தவர்கள்; புனிதர்களாக நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள்; நமக்காக செபிக்கிறார்கள்; நமக்காக பரிந்துபேசி அரும் அடையாளங்களை நமக்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள். தன் வாழ்நாளெல்லாம் செபத்திலேயே கழித்த தூய தெரசாள் இறப்பதற்கு முன்பு, ""என் பணி இனிமேல்தான் ஆரம்பமாகிறது'' என்று கூறி விண்ணகத்தில் உலக மக்களுக்காகப் பரிந்து பேசி செபிக்கப் போவதாக அறிவித்துச் சென்றாள்.

புனிதர்கள் "தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள். தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறை வாக்குகளை எடுத்துரைத்தார்கள். தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை நடத்தினார்கள். நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் தங்கள் வழி மரபில் மாட்சி பெற்றார்கள். தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள். அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள். அவர்களின் வழி மரபு என்றும் நிலைத்தோங்கும். அவர்களின் மாட்சி அழிக்கப்படாது. அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன.

அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவார் (சீராக் 44:1-15)'' என்ற தூய சீராக்கின் ஞான உரையைக் கண்ணோக்குகின்றபோது, நம் வாழ்வில் தீய எண்ணங்கள், உலக இச்சைகள், சிற்றின்பங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் நமக்காக வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்களின் மேன்மையை நாம் நினைக்க, சிந்திக்க வேண்டியுள்ளது.

"என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்'' (மத்தேயு 16:25) என்ற இறைமகன் இயேசுவின் வாக்குக்கு உண்மை சாட்சியாக நின்ற அன்னை மரியாள், தூய சூசையப்பர், தூய இராயப்பர், தூய அந்தோணியார், தூய செபஸ்தியார், தூய சின்னப்பர், தூய அருளப்பர், தூய தெரசாள், தூய அல்போன்சம்மால் போன்றோர்களின் பெயரைச் சொல்லி ""எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்று அவர்களிடம் செபங்கள் மூலமாக கேட்கின்றபோது, நம் தேவைகளை நிறைவேற்றவும், நம்மை பீடித்திருக்கின்ற நோய்களை, துன்பங்களை நீக்குவதற்காகவும், நமக்காக இறைவனிடம் நாள்தோறும் பரிந்து பேசுகிறார்கள்.

"விண்ணகத்தில் புனிதர்கள் தங்களிடம் இறை மக்களின் செபங்கள் வரும்போது, கிறிஸ்துவின் அரியணை முன் இந்த செபக் காணிக்கையையே தூபமாக அர்ப்பணிக்கிறார்கள்'' (திரு.வெளி:5-8).

கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது நமது கடமை. இன்றைய தினம், நவம்பர் ஒன்றாம் நாள் அனைத்து புனிதர்களின் நாள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment