Saturday, October 26, 2019

† புனிதர் எவரிஸ்டஸ் † (அக்டோபர் 26)

இன்றைய புனிதர்
(அக்டோபர் 26)


புனிதர் எவரிஸ்டஸ்
(St. Evaristus)


ஐந்தாம் திருத்தந்தை:
(5th Pope)

பிறப்பு: ஏப்ரல் 17, 44
பெத்லகேம், யூதேயா
(Bethlehem, Judea)

இறப்பு: கி.பி சுமார் 107
ரோமை, ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

இயற்பெயர்: எவரிஸ்டஸ் (அல்லது) அரிஸ்டஸ்

நினைவுத் திருநாள்: அக்டோபர் 26

புனிதர் எவரிஸ்டஸ் அல்லது அரிஸ்டஸ் (Aristus) கத்தோலிக்க திருச்சபையின் ஐந்தாம் திருத்தந்தையாவார். திருத்தந்தை புனிதர் முதலாம் கிளமெண்ட்” (Pope Clement I) இவருக்கு முன்னர் திருத்தந்தையாகப் பதவியிலிருந்தவராவார். திருத்தந்தை புனிதர் முதலாம் அலெக்சாண்டர்” (Pope Alexander I) இவருக்குப் பிறகு ஆட்சியிலிருந்தவராவார். தொடக்க கால கிறிஸ்தவ அறிஞர்களான இரனேயுஸ் மற்றும் செசரேயா யூசேபியஸ் (Eusebius) இச்செய்தியைத் தருகின்றனர்.

எவரிஸ்டஸ் என்னும் பெயர் கிரேக்க மொழியில் "இனிமை மிக்கவர்" என்று பொருள்படும்.

வாழ்க்கைக் குறிப்புகள் :
திருத்தந்தை எவரிஸ்டஸின் ஆட்சிக்காலம் குறித்து ஒத்த கருத்து இல்லை. "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் யூசேபியஸ் அந்த ஆட்சிக்காலம் கி.பி. 99 முதல் கி.பி. 108 வரை நீடித்தது என்கிறார். "லிபேரியன் குறிப்பேடு" என்னும் நூல் எவரிஸ்டஸின் பெயரை "அரிஸ்டஸ்" என்று குறிப்பிடுவதோடு, அவரது ஆட்சிக்காலம் கி.பி. 96 முதல் கி.பி. 108 வரை தொடர்ந்ததாகக் கூறுகிறது.

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற கீழ்வரும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்படி, கிரேக்கப் பின்னணியைச் சார்ந்த எவரிஸ்டஸ், யூதத் தந்தைக்கு பெத்லகேமில் மகனாகப் பிறந்தார். மறைச்சாட்சியாக உயிர் துறந்தார். ரோமத் திருச்சபையைப் பல பங்குகளாகப் பிரித்து குருக்களை நியமித்தார். 15 ஆயர்களையும் 17 குருக்களையும் 2 திருத்தொண்டர்களையும் ஏற்படுத்தினார்.

மேற்கூறிய ஏடு குறிப்பிடுவது போல, எவரிஸ்டஸ், புனித பேதுருவின் கல்லறையின் அருகே அடக்கம் செய்யப்பட்டார் என்று உறுதியாகத் தெரிகிறது. அவரது பணியிடம் 19 நாள்கள் வெறுமையாய் இருந்தது.

ரோமத் திருச்சபையின் முதல் திருத்தந்தையர்களின் பெயர்கள் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் இருக்க, எவரிஸ்டஸின் பெயர் மட்டும் அங்கு காணப்படவில்லை. இதிலிருந்து, இத்திருத்தந்தை பற்றிய உறுதியான வரலாற்றுச் செய்திகள் தெரியாத நிலை திருச்சபை வரலாற்றின் முதல் நூற்றாண்டுகளிலிருந்தே நிலவி வந்துள்ளது எனத் தெரிகிறது.

புனிதராகப் போற்றப்படுதல் :
எவரிஸ்டஸ் எவ்வாறு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்பது பற்றியும் உறுதிப்பாடு இல்லை. கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரை புனிதராகப் போற்றுகின்றன. இவர்தம் நினைவுத் திருவிழா அக்டோபர் 26 ஆகும். 1969ம் ஆண்டிலிருந்து இவரது பெயர் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் மறைச்சாட்சிகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு, இப்போது தனி நாள்காட்டியில் மட்டுமே உள்ளது.

No comments:

Post a Comment