† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 26)
✠ புனிதர் முதலாம் ஆல்ஃபிரட் ✠
(St. Alfred the Great)
ஆங்கிலோ-சாக்ஸன் இன அரசர்:
(King of the Anglo-Saxons)
ஆட்சிகாலம்: ஏப்ரல் 23, 871 - அக்டோபர் 26, 899
இவருக்கு முன்னர் பதவி வகித்தவர்: எத்தெல்பெர்ட் (Æthelred)
இவருக்குப் பிறகு பதவி வகித்தவர்: மூத்த எட்வர்ட் (Edward the Elder)
பிறப்பு: கி.பி. 849
வேன்டேஜ், பெர்க்ஷயர்
(Wantage, Berkshire)
இறப்பு: அக்டோபர் 26, 899 (வயது சுமார் 50)
வின்செஸ்டர் (Winchester)
நினைவுத் திருநாள்: அக்டோபர் 26
பேரரசர் ஆல்ஃபிரட், ஆங்கிலோ - சாக்சான் அரசின், (Anglo-Saxons) வெசெக்ஸ் (Wessex) பகுதியை கி.பி. 871ம் ஆண்டு முதல் கி.பி. 899ம் ஆண்டு வரை ஆண்ட அரசர் ஆவார்.
வெசக்ஸின் அரசன் எதெல்வுல்ஃப் (King Æthelwulf of Wessex) மற்றும் அவரது முதல் மனைவியான “ஒஸ்பூர்” (Osburh) ஆகியோரது கடைசி மகனாகப் பிறந்தவர் ஆல்ஃபிரட் ஆவார். கி.பி. 853ம் ஆண்டு, தமது நான்கு வயதில் ரோம் நகர் அனுப்பப்பட்ட இவர், திருத்தந்தை நான்காம் லியோவால் (Pope Leo IV) அரசனாக அபிஷேகம் செய்விக்கப்பட்டார். ஆல்ஃபிரட், தமது குழந்தைப் பருவத்தில், சாக்ஸன் கவிதைகள் (Saxon poems) கொண்ட ஒரு புத்தகத்திலுள்ள கவிதைகளை மனப்பாடம் செய்து தமது தாயாரிடம் ஒப்பித்து, அந்த புத்தகத்தை பரிசாக வென்ற கதையை ஆயர் “ஆஸ்செர்” (Bishop Asser) கூறுகிறார்.
இவரது அண்ணன் “எதல்ரெட்” (Æthelred) இறந்தபின் அரியணை ஏறிய ஆல்ஃபிரட் மிகத் திறமையான ஆட்சியாளராவார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் வில்டன் என்ற இடத்தில் நடந்த போரில் டேனியர்களிடமிருந்து வெசக்ஸ் நாட்டைக் காத்த பெருமைக்குரியவர். ஆங்கிலோ - சாக்சானிய அரசர்களுல் முதன் முதலில் பேரரசர் என அழைக்கப்பட்ட பெருமைக்குரியர் இவரே ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாறு “வெல்ஷ்” (Welsh) அறிஞரும், ஆயருமான “ஆஸ்செர்” (Asser) என்பவரால் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
தனது நாட்டில் கல்வி, அமைதி, ஒழுங்கு, சட்டம், இராணுவம் ஆகியவை நிலைபெற அரும்பணியாற்றினார். டேனிஷ் (Danish) படையினரால் மீண்டும் அச்சுறுத்தல்கள் ஏற்படாதிருக்குமாறு தமது இராச்சியத்தின் பாதுகாப்பை கட்டியெழுப்பினார். அடிக்கடி கடலோரப்பகுதிகளில் தொல்லைகள் தந்த டேனிஷ் (Danish) படையினரை ஒடுக்குவதற்காக கடற்படையையும் நிறுவினார். தமது இராணுவத்தை மறுசீரமைத்த அவர், தெற்கு இங்கிலாந்து முழுவதும் நன்கு பாதுகாக்கப்பட்ட குடியேற்றங்களின் ஒரு தொடரை கட்டமைத்தார்.
கல்வியின் முக்கியத்துவத்தில் வலுவான நம்பிக்கை கொண்டிருந்த பேரரசர் ஆல்ஃபிரெட், தமது முப்பது வயதில் இலத்தீன் மொழியைக் கற்றார். இவர், சிறந்த கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும், கருணையுள்ளம் கொண்டவராகவும் விளங்கினார். கற்றறிந்த மற்றும் இயற்கையாகவே ஒரு கருணையும் இரக்கமுமுள்ள மனிதனாக புகழ் பெற்றவர் ஆவார். கல்வியை ஊக்குவித்த இவர், ஆரம்பக் கல்வியில் இலத்தீன் மொழியை விட ஆங்கில மொழியையே ஊக்குவித்தார். தமது அரசியலின் சட்ட அமைப்பு, இராணுவ அமைப்பு மற்றும் அவரது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டார்.
கி.பி. 899ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மரித்த பேரரசர் ஆல்ஃபிரட், அவரது தலைநகரான வின்செஸ்டரில் (Winchester) அடக்கம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment