Monday, October 21, 2019

† புனிதர் லாரா † (அக்டோபர் 21)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 21)


புனிதர் லாரா
(St. Laura of Saint Catherine of Siena)

மறைப்பணியாளர்/ நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: மே 26, 1874
ஜெரிகோ, அன்டியோகுயியா, ஐக்கிய கொலம்பியாவின் மாகாணங்கள்
(Jericó, Antioquía, United States of Colombia)

இறப்பு: அக்டோபர் 21, 1949 (வயது 75)
பெலென்சிடோ, மெடெல்லின், அன்டியோகுயியா, கொலம்பியா
(Belencito, Medellín, Antioquía, Colombia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 25, 2004
திருத்தந்தை ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 12, 2013
திருத்தந்தை பிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 21

பாதுகாவல்:
இன பாகுபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள்
அனாதைகள்
மரியாவின் மாசற்ற இருதயம் சபை (Congregation of Missionary Sisters of Immaculate Mary)
புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் சபை (Congregation of  Saint Catherine of Siena)

புனிதர் சியன்னா நகர கத்ரீனாவின் லாரா, ஒரு கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். 1914ம் ஆண்டு, இவர் மரியாவின் மாசற்ற இதயம் (Congregation of Missionary Sisters of Immaculate Mary), மற்றும் புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் (Congregation of  Saint Catherine of Siena) என்னும் துறவற சபைகளை நிறுவினார். இவர் பழங்குடி இனத்தவர்களின் உரிமைக்காக பாடுபட்டார். தென் அமெரிக்க பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகின்றார்.

“மரிய லாரா டி ஜீசஸ் மொன்டோயா யி உபெகுயி” (María Laura de Jesús Montoya Upegui) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கொலொம்பியாவின் (Colombia) “ஜெரிகோ” (Jericó) நகரில் பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர், "ஜுவான் டி லா க்ரூஸ் மோன்டோயா" (Juan de la Cruz Montoya) ஆகும். தாயாரின் பெயர், "டோலோரெஸ் ஊபேகுய்" (Dolores Upegui) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாம் குழந்தை ஆவார்.

1876ம் ஆண்டு நடந்த கொலம்பிய உள்நாட்டுப் (Colombian Civil War) போரின்போது, அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் விளைவாக குடும்பத்தினர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர் தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ அனுப்பப்பட்டார். 1881ம் ஆண்டு, நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக, அருட்சகோதரியான அவருடைய சித்தி "மரியா டி ஜீஸஸ் உபேகுய்" (María de Jesús Upegui) நிர்வகித்து வந்த அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

1890ம் ஆண்டு, தமது பதினாறு வயதில், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். "அமால்ஃபி" (Amalfi) மற்றும் "மெடேல்லின்" (Medellín) ஆகிய நகரங்களில் கல்வி கற்றார். 1886ம் ஆண்டு, நோயுற்ற அத்தை ஒருவரைப் பராமரிப்பதற்காக அவரது பண்ணையொன்றில் வந்து வசிக்க ஆரம்பித்தார். அங்கேதான், தாம் ஒரு மறைப்பணியாளராக வேண்டிய விருப்பம் இவருக்கு தோன்ற ஆரம்பித்தது. 1893ம் ஆண்டு, மொண்டோயோ, ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றார்.

1908ம் ஆண்டு, அவர் உராபா” (Uraba) மற்றும் ரார்” (Sarare) பிராந்தியங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றினார், அங்கே, "இந்தியர்களின் படைப்புகள்" (Works of the Indians) எனும் அமைப்பு நிறுவப்பட்டது. மொண்டோயோ, கார்மேல் சபை கன்னியாஸ்திரியாக ஆக விரும்பினார். ஆனால், கிறிஸ்துவின் அன்பை இதுவரை சந்தித்திராத மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆசையும் ஆர்வமும் அவருள் எழுந்ததை உணர்ந்தார். மொண்டோயோ, தற்போதுள்ள இனப் பாகுபாடுகளை நீக்கி, கிறிஸ்துவின் அன்பையும் போதனைகளையும் அவர்களிடம் கொண்டு வர தம்மையே அர்ப்பணிக்க விரும்பினார்.

1917ம் ஆண்டு, மே மாதம், 14ம் நாளன்று, “மரியாளின் மாசற்ற இருதயம் சபை” (Congregation of Missionary Sisters of Immaculate Mary) மற்றும் “புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் சபை” (Congregation of  Saint Catherine of Siena) ஆகிய இரண்டு சபைகளை நிறுவினார். நான்கு சக பெண்களுடன் “மெடல்லின்” (Medellín) நகரை விட்டு கிளம்பி, “டபெய்பா” (Dabeiba) நகரில் ஆதிவாசி இந்தியர்களுடன் வாழ சென்றார்.

இவர்களது புதிய சபைகளுக்கு “சாண்டா ஃபே டி அன்டோனியா” (Bishop of Santa Fe de Antioquia) மறைமாவட்ட ஆயரின் ஆதரவு இருந்தபோதிலும் பிற கிறிஸ்தவ குழுக்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நீண்டகாலம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மோண்டோயா, 1949ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 21ம் தேதியன்று, கொலம்பியாவில் உள்ள “மெடல்லின்” (Medellín) நகரில் இறந்தார். நோய் காரணமாக, இவரது வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்கள், சக்கர நாற்காலியிலேயே கழிந்தது. தற்போது அவரது சபைகள், மொத்தம் பத்தொன்பது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் செயல்படுகிறது.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 2004ம் ஆண்டு, இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். 2013ம் ஆண்டு, மே மாதம், 12ம் நாளன்று, திருத்தந்தை ஃபிரான்சிஸ் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார்.

No comments:

Post a Comment