Wednesday, October 16, 2019

† புனிதர் மார்கரெட் மேரி அலாகோக் † (அக்டோபர் 16)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 16)


புனிதர் மார்கரெட் மேரி அலாகோக்
(St. Margaret Mary Alacoque)


தூய திருஇருதயத்தின் சீடர்:
(Disciple of the Sacred Heart)

பிறப்பு: ஜூலை 22, 1647
லாட்டகொர், பர்கண்டி, ஃபிரான்ஸ் அரசு
(L'Hautecour, Duchy of Burgundy, Kingdom of France)

இறப்பு: அக்டோபர் 17, 1690 (வயது 43)
பரே-லீ-மொனியல், பர்கண்டி, ஃபிரான்ஸ்
(Paray-le-Monial, Duchy of Burgundy, Kingdom of France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: செப்டம்பர் 18, 1864
திருத்தந்தை 9ம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: மே 13, 1920
திருத்தந்தை 15ம் பெனடிக்ட்
(Pope Benedict XV)

முக்கியத் திருத்தலங்கள்:
தூய மரியாளின் திருவருகை துறவகம், பரே-லீ-மொனியல், சவோன்-எட்-லொய்ர், ஃபிரான்ஸ்
(Monastery of the Visitation, Paray-le-Monial, Saône-et-Loire, France)

நினைவுத் திருவிழா: அக்டோபர் 16

பாதுகாவல்:
போலியோ பாதித்தோர், திருஇருதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்

புனிதர் மார்கரெட் மேரி அலாகோக், ஃ பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், மறைபொருளாளருமாவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே. இயேசு கிறிஸ்துவின் திருஇருதயத்தால் அடையாளப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பை உணர்த்துவதற்காக திருச்சபையை தூண்டுவதற்காக கிறிஸ்து இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவரேயாவார்.

மார்கரெட் மரியா, கி.பி. 1647ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி ஃபிரான்ஸ் நாட்டின் பர்கண்டியில்” (Burgundy) உள்ள லாட்டகொர்” (L'Hautecour) என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். கிளாட்மற்றும் ஃபிளிபெர்ட்” (Claude and Philiberte Lamyn Alacoque), ஆகியோரின் ஒரே மகளான மார்கரெட், சிறு வயது முதலே திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாக துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.

கிறிஸ்து இயேசுவின் திருக்காட்சிகள் :
கி.பி. 1671ம் ஆண்டு, மே மாதம், 25ம் தேதி, மார்கரெட் தனது 24ம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார்.

அந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.

கி.பி. 1673ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 27ம் தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.

மார்கரெட், இயேசுவின் திருஇருதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்ளுதல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.

தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனிதர் கிளாட் தெ லா கொலம்பியர்” (St. Claude de la Colombière), இவரது காட்சிகளின் உண்மைத் தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 1686ம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்ட விதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇருதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇருதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.

புனிதர் பட்டம் :
கிறிஸ்துவைப் பலமுறை காண பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண கி.பி. 1690ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பக்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், கி.பி. 1698ம் ஆண்டு, ஜெ.க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. கி.பி. 1824ம் ஆண்டு, “திருத்தந்தை 12ம் லியோ” (Pope Leo XII) இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.

மார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து கி.பி.1830ம் ஆண்டு, இவரது கல்லறை தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. கி.பி. 1864ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ்” (Pope Pius IX) இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்கினார்.

கி.பி. 1920ம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட்” (Pope Benedict XV) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். கி.பி. 1929ம் ஆண்டு, மார்கரெட் இறந்த அக்டோபர் 17ம் தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா இணைக்கப்பட்டது. கி.பி. 1969ம் ஆண்டு, இவரது விழா அக்டோபர் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

கி.பி. 1928ம் ஆண்டு, “திருத்தந்தை 11ம் பயஸ்” (Pope Pius XI) இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை :
"மேலும், இயேசு கிறிஸ்து மனிதரால் அன்பு செய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்."
~ புனிதர் மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)

No comments:

Post a Comment